முதல் கோணல் முற்றிலும் கோணல்! திருவண்ணாமலை பிரச்சாரத்தில் சொதப்பிய மு.க.ஸ்டாலின் டீம்!

By Selva KathirFirst Published Jan 30, 2021, 5:24 PM IST
Highlights

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள் அதற்கு ஏற்ப நேற்று திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கிய தேர்தல் பிரச்சார ஏற்பாடு சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் முதலே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குவதற்கான நல்ல நேரம், நல்ல இடத்தை துர்கா ஸ்டாலின் தேடி வந்தார். முதலில் தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப தை ஒன்றாம் தேதி முதல் அதாவது பொங்கல் நாளன்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் பொங்கல் பண்டிகைளில் மக்கள் மும்முரமாக இருப்பார்கள், கூட்டத்தை கூட்டுவது சிரமம், தவிர அனைத்து தொலைக்காட்சிகளும் ஜல்லிக்கட்டு நேரலையில் மும்முரமாக இருப்பார்கள். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தை ஒன்றாம் தேதி பிரச்சார திட்டத்தை திமுக கைவிட்டது.

அதன் பிறகு தை முதல் வாரத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்றால் நல்ல நாள் இல்லை. இதனை அடுத்தே பிரச்சாரத்தை ஜனவரி கடைசிக்கு திமுக தலைமை ஒத்திவைத்தது. இதே போல் பிரச்சாரத்தை எங்கு தொடங்குவது என்பதிலும் திமுக தலைமை மற்றும் துர்கா ஸ்டாலின் மிகுந்த யோசனையில் இருந்தனர். அண்ணா பிறந்த இடம், கலைஞர் பிறந்த இடம், பெரியார் மண் என பல யோசனைகள் கூறப்பட்டாலும் அவற்றை எல்லாம் துர்கா ஸ்டாலின் நிராகரித்துவிட்டதாக கூறுகிறார்கள். மேலும் சிவனுக்கு உகந்த ஒரு இடத்தில் பிரச்சாரத்தை துவக்கலாம் என்று துர்கா கருதியதை தொடர்ந்தே திருவண்ணாமலை தேர்வு செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.

திருவண்ணாமலை என்றாலே பவுர்ணமி தான் ஹைலைட். எனவே தான் நிறைந்த பவுர்ணமியின்விடியலில் ஸ்டாலின் விடியலை நோக்கி பிரச்சாரத்தை துவக்கியதாக சொல்கிறார்கள். சிவன், திருவண்ணாமலை, பவுர்ணமி என அனைத்துமே முழுமைய அடைந்தவை என்பதால் முழுமையாக பிரச்சாரத்தை ஸ்டாலின் அன்றைய தினம் துவக்கியுள்ளார். வழக்கமான பிரச்சாரமாக இல்லாமல் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதற்கு தகுந்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டாலின் மேடைக்கு வருவதற்கு முன்பாகவே அங்கு ஒரு புகார் பெட்டி கொண்டு வரப்பட்டது.

அதில் மக்கள் தங்களுடையை கோரிக்கைகள், வேண்டுதல்கள், குறைகளை மனுக்காக கொண்டு வந்து செலுத்தினர். ஸ்டாலின் வந்து அந்த பெட்டியில் இருந்து புகார் மனுவை எடுத்து வாசித்ததுடன் மனுவை அளித்த நபரை மைக்கில் அழைத்து அவர்களிடமும் சிறிது நேரம் உரையாடினார். ஆனால் இதில் என்ன கோணல் என்றால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரச்சாரத்தை துவக்கும் முன்பு கோவிலில் வழிபடச் சென்றார். அப்போது முதல் அவர் பிரச்சாரத்தை முடிக்கும் வரை அனைத்து முன்னணி செய்தி சேனல்களும் நேரலையில் ஒளிபரப்பின. முதலமைச்சரின் பேச்சும் அதிரடியாக இருந்தது.

ஆனால் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியதை ஒரு சேனல் கூட நேரலை செய்யவில்லை. ஏன் திமுக ஆதரவு சேனல் என்று சொல்லப்படும் சன் நியுஸ் கூட ஸ்டாலின் திருவண்ணாமலை பிரச்சாரத்தை துவங்கிய போது நேரலை செய்யவில்லை. இதற்கு காரணம் அப்போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிக் கொண்டிருந்தது தான். அனைத்து செய்திச் சேனல்களும் ராம்நாத் கோவிந்த் உரையையே லைவ் செய்து கொண்டிருந்தார்கள். சன்நியுஸ் உள்ளிட்ட எந்த சேனலும் ஸ்டாலின் பிரச்சாரத்தை கண்டுகொள்ளவில்லை.

குடியரசுத் தலைவர் நேற்று காலை 11 மணிக்கு உரையாற்ற உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குடியரசுத் தலைவர் உரையாற்றும் போது அனைத்து செய்தி சேனல்களும் அதனைத்தான் லைவ் செய்யும் என்பது ஸ்டாலினின் மீடியா டீமுக்கு தெரியாமல் போய்விட்டதா என்று தெரியவில்லை. மேலும் அப்படி தெரிந்திருந்தால் ஸ்டாலின் பிரச்சாரத்தை சிறிது நேரம் முன்னரே துவக்கியிருக்கலாம். ஆனால் இதனை செய்யாத காரணத்தினால் ஸ்டாலின் மேடைக்கு வந்தது, மக்களை சந்தித்தது என மாஸ் விஷயங்கள் எதுவுமே லைவ் செய்யப்படவில்லை. ஸ்டாலின் பிரச்சாரத்தை துவக்கி சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு ஸ்டாலின் மீடியா டீமில் இருந்து ஒவ்வொரு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு லைவ் செய்யுமாறு கேட்க ஆரம்பித்தனர.

இதன் பிறகு ஸ்டாலின் பிரச்சாரத்தை துவக்கி சுமார் அரை மணி நேரம் கழித்தே தமிழ் செய்தி சேனல்கள் லைவை ஆரம்பித்தன. அதுவும் கூட ஸ்டாலின் பேச்சில் சுவாரஸ்யம் எதுவும் இல்லை. மக்கள் கிராம சபை கூட்டங்களில் பேசிய விஷயங்களையே ஸ்டாலின் பேசியதால் தொலைக்காட்சிகள் ஸ்டாலின் லைவை சுமார் 5 நிமிடங்களில் முடித்துக் கொண்டன. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் சுமார் 30 நிமிடங்கள் வரை அனைத்து தொலைக்காட்சிகளிலும், ஏன் சன்நியுசிலும் கூட நேரலை செய்யப்பட்டன. இப்படி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசத் தொடங்கிய நேரத்தில் ஸ்டாலினையும் பேச வைத்த காரணத்தினால் ஸ்டாலின் பிரச்சாரம் முதல் நாளில் தொலைக்காட்சிகளில நேரலை செய்யப்படாத நிலையில் முதல் கோணலாகியுள்ளது. அது முற்றிலும் கோணலாகுமா? இல்லை சரி செய்வார்களா என்பது இனி தான் தெரியும்.

click me!