கணவரை காணோமா? இல்லை கறவை மாடு வேணுமா? ஸ்டாலின் பிரச்சார காமெடிகள்!

By Selva KathirFirst Published Jan 30, 2021, 5:10 PM IST
Highlights

கறவை மாடு வேண்டும் என்று கொடுத்த மனுவை கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று மனு கொடுத்துள்ளதாக ஸ்டாலின் பேசியதால் திருவண்ணாமலை பிரச்சார கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
 

கறவை மாடு வேண்டும் என்று கொடுத்த மனுவை கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று மனு கொடுத்துள்ளதாக ஸ்டாலின் பேசியதால் திருவண்ணாமலை பிரச்சார கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

திருவண்ணாமலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கினார். புதிய முறையில் அவர் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அதன்படி, ஸ்டாலின் வருவதற்கு முன்பே பிரச்சார திடலில் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை செலுத்தினர். ஸ்டாலின் வந்த பிறகு அந்த பிரச்சார பெட்டியை திறந்தனர். தொடர்ந்து உள்ளே இருந்து ஒவ்வொரு மனுவாக எடுத்து ஸ்டாலின் படிக்க ஆரம்பித்தார். முதலில்மனு கொடுத்தவரின் பெயர் மற்றும அவரது தந்தை பெயரை அழைத்து ஸ்டாலின் அவர்களின் குறைகளை அவர்கள் வாயாலேயே கேட்டார்.

ஒவ்வொருவரும் வரிசையாக எழுந்து வீட்டு மனை பட்டா தேவை, குடி நீர் இணைப்பு தேவை, கறவை மாடு வேண்டு என்று விதவிதமான கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றை எல்லாம் படித்துக் காட்டியதோடு, புகார்தாரர்களிடமும் நேரடியாக உரையாடி அவர்களின் குறைகளை திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் சரி செய்வதாக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் புகார் பெட்டியில் இருந்து திருமலை என்பவர் கொடுத்த மனுவை ஸ்டாலின் எடுத்து, திருமலை திருமலை என்று பெயரை கூறி அழைக்க ஆரம்பித்தார். அத்துடன் திருமலை என்பவர் தனது கணவரை காணவில்லை என்று மனு கொடுத்துள்ளதாகவும் அவர் எங்கே இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.

இதனை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். என்னது கணவரை காணவில்லை என்பதற்காகவெல்லாமா? ஸ்டாலினிடம் மனு கொடுப்பார்கள் என்று சிரிப்பலை அடங்க சிறிது நேரம் ஆனது. ஒரு வழியாக அந்த திருமலை எழுந்த போது சிரிப்பலை மேலும் அதிகமானது . ஏனென்றால் எழுந்த திருமலை பெண் அல்ல ஆண், அது எப்படி ஒரு ஆண் தனது கணவரை காணவில்லை என்று மனு அளிப்பார் என்று அனைவரும் சிரித்தபடியே அவரது பேச்சை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர் தனக்கு ஒரு கறவை மாடு வேண்டும் என்று கூற சிரிப்பலை இன்னும் அதிகமானது, அதாவது திருமலை என்பவர் தனக்கு கறவை மாடு வேண்டும் என்று மனு கொடுத்திருந்ததை ஸ்டாலின் கணவரை காணவில்லை என்று படித்துள்ளது அப்போது தான் தெரியவந்தது.

இதனை அடுத்து சந்திரா எனும் பெண்மணி கொடுத்த மனுவை எடுத்து ஸ்டாலின் படித்தார். அவர் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். பேசும் போது தான் தற்போது தனியாக இருப்பதாகவும், மகள்கள், மகன்கள் கரூருக்கு சென்றுவிட்டதாகவும், கணவர் இல்லை என்றும் எனவே தன்னை உங்களின் அம்மாவாக நினைத்து உதவ வேண்டும் என்று ஸ்டாலினை நோக்கி சந்திரா கேட்க சிலர் சிரித்தனர். காரணம் சந்திராவிற்கு ஸ்டாலின் வயது கூட இருக்காது என்பது தான். அத்தோடு பேசுவதற்கு எழுந்த சந்திரா, மேடையில் இருக்கும் ஸ்டாலினை நோக்கி யார் அவர் என்று கேட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி முதல் நாள் பிரச்சாரம் காமெடிகளுக்கும், சென்டிமெண்டுகளுக்கும் குறைவே இல்லாமல் நடைபெற்று முடிந்தது.

click me!