வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை உறுதி செய்த மு.க.ஸ்டாலின்... பூரித்துப்போன டாக்டர் ராமதாஸ்..!

By Asianet TamilFirst Published Jul 26, 2021, 10:18 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க அரசாணை பிறப்பித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
 

முந்தைய அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கி மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த மசோதா கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக பாமக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் கேள்வியும் எழுப்பியிருந்தனர். இதில் தமிழக அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், “வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு” முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து கல்விச் சேர்க்கைகளும் புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பையடுத்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இடஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும். வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்  ஆகியோருக்கும் நன்றிகள்!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

click me!