
தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்க்கக்கூடிய அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், உள்ளாட்சி தேர்தலை தாமதமின்றி நடத்துவது உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை 10.15 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டம் கட்சியின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. கட்சியின் பொது செயலாளர் அன்பழகன், துணை பொது செயலாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்காத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த திமுக வலியுறுத்தி உள்ளது. மாநில உரிமைகளை தாரைவார்க்கும் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் போடப்பட்டன.
இந்த கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் டெங்குவால் கொத்து கொத்தாக மாண்டு போகக் கூடிய கொடுமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானம் போடப்பட்டது.
மாநில உரிமைகளை தாரைவார்க்கக்கூடிய அதிமுகவுக்கு கண்டனம் தெரிவித்தும், உள்ளாசி தேர்தலை தாமதமின்றி உடனடியாக நடத்தவும் தீர்மானம் போடப்பட்டது.
நமக்கு நாமே என்ற எழுச்சி பயணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார். மேலும் நமக்கு நாமே எழுச்சி பயணம் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும் என்றார்.
பயணத் திட்டம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் பயண நாட்கள் குறித்து முடிவு செய்ய இன்னும் 4 அல்லது 5 நாட்கள் ஆகும் என்று கூறினார். இந்த பயணம் தேர்தலுக்காக மட்டுமன்றி கட்சியை வலுப்படுத்தவும் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டவும் பயன்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.