
உண்மைக்கு மாறான தவறான பார்வையை ஏற்படுத்தும் வகையில் உள்ள வசனங்களை மெர்சல் படத்திலிருந்து நீக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு பிரச்னைகளைக் கடந்த தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம், வெளிவந்த பிறகும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்துவருகிறது.
சிங்கப்பூரை விட அதிகமாக ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவ வசதி செய்துதரப்படவில்லை எனவும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கிண்டல் செய்யும் வகையிலும் வசனங்களும் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த பாஜக தலைவர்கள் மெர்சல் படத்திலிருந்து அந்த காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சினிமா துறையைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என தெரிவித்தார்.
உண்மைக்கு மாறான தவறான கண்ணோட்டத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக மெர்சல் படத்தில் உள்ள வசனங்களை நீக்க வேண்டும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ள வசனங்களை நீக்க வேண்டும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர்.