எதிர்கட்சிகளின் பிளானை அந்தர் பண்ணிய ஸ்டாலின்! கடிதத்திலும் மண்ணை வாரிப்போட்ட கொடுமை...

By sathish kFirst Published Dec 18, 2018, 11:58 AM IST
Highlights

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் ராகுல் முன்னிலையிலேயே, அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த அறிவிப்பானது தேசிய அளவில் முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

வடமாநிலங்களில் இது தான் ஹாட் டாப்பிக். ஸ்டாலினின் இந்த முடிவை திமுக கூட்டணி கட்சிகள் சிலர் முன்மொழிந்தாலும் கூட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கான காரணம் குறித்து ஸ்டாலின் அறிக்கை மூலம் விளக்கியுள்ளார். 

அதில், மத்தியிலே நடைபெறும் "சேடிஸ்ட் மோடி" தலைமையிலான பாசிச-நாசிச ஆட்சியை வீழ்த்த ராகுல்காந்தியை முன்னிறுத்தி, அவரது கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் பொருளாதாரத்தை நாசமடைய செய்து, மத நல்லிணக்கத்தைச் சிதைத்து, இந்தியாவின் இத்தனை வருட பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் அழிக்கும் மோடி அரசை நாம் வீழ்த்த வேண்டும்.

தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக வஞ்சிக்கும் மோடி அரசை வீழ்த்திட வேண்டுமென்றால் அதற்கு வலிமையான நபர் தேவை. இவ்வளவு நாட்கள் பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையக் காரணமாக அமைந்தவரான ராகுல் காந்தியை முன்னிறுத்துவது தான் கூட்டணிக்கு பலமாக இருக்கும். மதசார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக அவரின் முன்னெடுப்பு இருக்கும் என்ற அடிப்படையிலே அவரின் பெயரை உரக்கச் சொன்னேன்.

கருணாநிதி காட்டிய வழி, நேரு குடும்பத்தில் இந்திராவால் தொடங்கி இன்றுவரை நல்ல நட்பினைக் நாம் கொண்டுள்ளோம். நாங்கள் கொடுத்து வந்த அந்த ஆதரவும் எதிர்ப்பும் நாட்டின் நலன் கருதியே எடுக்கப்பட்டவை. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் நாட்டுடைமை செய்யப்பட்டன, மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக்கான திட்டங்கள் பல செய்யப்பட்டது. அதனால் 1980-ல் "நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக..." என முழங்கி அவரின் வெற்றிக்கு துணை நின்றவர் தலைவர் கருணாநிதி.

2004-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனநாயக ஆட்சி அமைந்திட திமுகதான் பெரிய காரணமாக இருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தலைமையை ஏற்பது குறித்து அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தபோது, "இந்திராவின் மருமகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க.." என முதன் முதலாக அவர் பக்கம் நின்று முழங்கியவர் தலைவர் கருணாநிதி. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அதேபோல் இந்த முறை தயக்கத்தை உடைத்து, மயக்கத்தைத் தெளிவித்து, மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றால் இன்றைய நிலையில் இந்திய தேசிய காங்கிரசின் இளந்தலைவர் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டி உள்ளது. பாசிசத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயகப் படையினை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வலுவான தலைமை என்ற அடிப்படையில்தான் ராகுல்காந்தியை முன்மொழிந்து இருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டே  ஸ்டாலின் இப்படி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதற்கு விளக்கம் அளிக்கும் கடிதத்திலும் சொன்ன பேச்சை பின் வாங்காமல் இப்படி விளக்கம் அளித்துள்ளது எதிர் கட்சி தலைவர்களை அட்ஜஹிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

click me!