வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அந்தந்த நாட்டு தூதரகங்களிடம் ஒப்படைக்க வேண்டும்..!! முதல்வருக்கு அன்சாரி கடிதம்

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2020, 1:28 PM IST
Highlights

விசா விதி மீறல்கள் குறித்து கைதான தப்லீக்கினர்  ஜாமீன் பெற்று வந்ததும், அவர்களின்  வழக்குகளை முடித்து வைத்து, மஹாராஷ்டிரா சிவசேனை அரசு அவர்களை அந்தந்த நாடுகளின் தூதரகங்களிடம் ஒப்படைத்து விட்டது.

வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அந்தந்த நாட்டு தூதரகங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கொரனாவுக்கு முன்பாக வெளிநாடுகளிலிருந்து ஆன்மீக பயணமாக தமிழகம் வந்திருந்த தப்லீக் ஜாமாஅத் பயணிகள் விசா விதிமீறல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு பிறகு அவர்கள்  ஜாமீன் பெற்றுள்ளனர். பிரான்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா, தாய்லாந்து , புருனே, எத்தியோப்பியா, பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்த 129 பேர் அதில் உள்ளனர். அதில் 12 பெண்களும் அடங்குவர். 

இவர்கள் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது..விசா விதி மீறல்கள் குறித்து கைதான தப்லீக்கினர்  ஜாமீன் பெற்று வந்ததும், அவர்களின் வழக்குகளை முடித்து வைத்து, மஹாராஷ்டிரா சிவசேனை அரசு அவர்களை அந்தந்த நாடுகளின் தூதரகங்களிடம் ஒப்படைத்து விட்டது. கர்நாடக பாஜக அரசு அவர்களை ஹஜ் இல்லத்திலும், தெலுங்கானா மாநில அரசு பள்ளிவாசல்களிலும், டெல்லி மாநில அரசு சிறப்பு விடுதிகளிலும் தங்க வைத்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, அவர்கள் ஜாமீன் பெற்று வந்தும், சிறார் சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு ஜாமீன் பெற்றுள்ள அவர்களை , மதரஸா அல்லது தனியார் கல்லூரியில் தங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்து, மஹாராஷ்டிர சிவசேனை அரசு செய்தது போல இவர்களின் வழக்குகளை முடித்து வைத்து அந்தந்த நாடுகளின் தூதரகங்களில் அவர்களை  ஒப்படைத்திட  துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.இது குறித்து பல்வேறு மட்ட அதிகாரிகளிடமும்  பேசி வருகிறார்.
என அதில் கூறப்பட்டுள்ளது. 

click me!