ஸ்வப்னா விவகாரம்... பினராயி விஜயனின் முதல்வர் பதவி பறிபோகும் அபாயம்..?

By vinoth kumarFirst Published Jul 9, 2020, 12:32 PM IST
Highlights

கேரள முதல்வர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பிலிருக்கும் ஸ்வப்னா சுரேஷ், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

கேரள முதல்வர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பிலிருக்கும் ஸ்வப்னா சுரேஷ், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக கிளை அலுவலகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, தங்க கடத்தல் நடப்பதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரது பெயருக்கு, இந்த பார்சல் வந்திருந்தது. விசாரித்ததில், அவருக்கும், பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என தெரியவந்தது.

இதனையடுத்து, விசாரணை நடத்தியதில்  நிர்வாக செயலராக பணியாற்றிய ஸ்வப்னா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு, இந்த கடத்தல் பணியைச் செய்து வந்தது தெரியவந்தது. இந்த ஸ்வப்னா முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் செயலாளராக உள்ள சிவசங்கரால் பணியமர்த்தப்பட்டவர். இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் ஸ்வப்னா தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, முதல்வரின் முதன்மை செயலர் பொறுப்பிலிருந்து சிவசங்கர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வர் அலுலவகத்துக்கு தொடர்பு உள்ளது. 'இது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இந்த குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன், 'தங்க கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னாவை பற்றி எனக்கு தெரியாது. 'அரசு பணியில் அவர் சேர்ந்ததும் எனக்கு தெரியாது' என்றார். இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள், இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, மத்திய புலனாய்வு பிரிவும், தங்க கடத்தல் குறித்த விசாரணையை  தொடங்கியுள்ளதால் பல அதிர்ச்சி தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. 

click me!