குப்பை கொட்டும் வளாகத்திற்கு குப்பைகள் செல்வது குறையும்..!! மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2020, 11:42 AM IST
Highlights

சென்னை மாநகராட்சியின் குப்பை கொட்டும் வளாகத்திற்கு செல்லும் குப்பைகளின் அளவு வெகுவாக குறையும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

பெருநகர சென்னை மாநகராட்சியில் 400 டன் அளவிலான தோட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஐந்து மறுசுழற்சி நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் கே.பிரகாஷ் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி கொங்கு ரெட்டி சுரங்கப்பாதை அருகில் உள்ள பழைய தார் நிலையத்தில் ரூபாய் 9.33 கோடி மதிப்பீட்டில் வடிவமைத்தல், கட்டுதல், நிதி, இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையில் 50 டன் திறன் கொண்ட மக்கும் குப்பையில் இருந்து எரிவாயு தயாரிக்கும் நிலையம் அமைக்கும் பணியினை ஆணையர் பிரகாஷ் அவர்கள் 4-7-2020 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து பழைய தார் நிலையத்தில் அமைக்கப்பட்டுவரும் சுமார் 80 டன் அளவிலான தோட்ட கழிவுகள் மற்றும் இளநீர் ஓடு கழிவுகளை கொண்டு மறுபயன்பாடு பொருள் தயாரிக்கும் நிலையத்தை ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூபாய்  9.33 கோடி மதிப்பீட்டில் ஐந்து இடங்களில் 400 டன் அளவிலான தோட்ட கழிவுகள் மற்றும் இளநீர் ஓடு கழிவுகளை கொண்டு மறுபயன்பாடு பொருள் தயாரிக்கும் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உருவாகும் மொத்த மக்கும் குப்பையை  பயன்படுத்தும்  வகையில் மூன்று எண்ணிக்கையில் 100 டன் திறன் கொண்ட இயற்கை எரிவாயு நிலையம் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் 100 டன் திறன் கொண்ட மூன்று இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கவும்  ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது, இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் சுமார் ஆறு மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், சென்னை மாநகராட்சியின் குப்பை கொட்டும் வளாகத்திற்கு செல்லும் குப்பைகளின் அளவு வெகுவாக குறையும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 

click me!