மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றதற்கு ஆதாரம் அமெரிக்காவில்... எ.வ.வேலு அதிரடி சரவெடி பேச்சு..!

By vinoth kumarFirst Published Nov 10, 2019, 5:58 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் எவ.வேலு பேசுகையில் மிசாவின் வரலாறு தெரியுமா பாண்டியராஜனுக்கு? மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றார் என்பதற்கு அமெரிக்காவின் வாஷிங்டனில் ரெக்கார்டு இருக்கிறது. இஸ்மாயில் கமிஷனின் அறிக்கையை கையோடு கொண்டு வந்திருக்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றதற்கு அமெரிக்காவில் ஆதாரம் இருக்கிறது என முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு அதிரடியாக கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பான விவாதம் மற்றும் அது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது சர்ச்சை கருத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரின் உருவ பொம்மையையும் எரித்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனிடையே, அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது என்றும் அவர் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில், தியாகம் வளர்க்கும் திராவிடப் பெருவிழா என்ற தலைப்பில் திமுக சார்பில் சூளை பகுதியில் தெருமுனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எ.வ.வேலு, விபி.கலைராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, கலையராஜன் பேசுகையில், பாஜகவின் பிரமோத் மகாஜனின் உதவியாளராக இருந்து, அவர் மரணத்திற்கு பின் மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு வந்தவர் மாஃபா பாண்டியராஜன். சார்ந்திருந்த இயக்கத்திற்கு உண்மையாக இருக்காதவர் என விமர்சனம் செய்தார். 

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் எவ.வேலு பேசுகையில் மிசாவின் வரலாறு தெரியுமா பாண்டியராஜனுக்கு? மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றார் என்பதற்கு அமெரிக்காவின் வாஷிங்டனில் ரெக்கார்டு இருக்கிறது. இஸ்மாயில் கமிஷனின் அறிக்கையை கையோடு கொண்டு வந்திருக்கிறேன். நம் கட்சிக்காரர்கள் எழுதியதல்ல இது. உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்பவர், தமிழர் நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று கூறுபவர் பாண்டிய ராஜன். என கடுமையாக விமர்சித்து பேசினார்.

click me!