உள்ளாட்சி தேர்தல்... ஜெட் வேகத்தில் செயல்படும் அதிமுக...!

By vinoth kumarFirst Published Nov 10, 2019, 3:54 PM IST
Highlights

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கால் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.  அதன்பிறகு கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. 

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளை செய்து வந்தது. இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அனைத்து பதவிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள்நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனு பெறுவதற்கான கட்டணங்கள் விவரம்;-

* மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரம்

* மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரம்

* நகர் மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரம்

* நகர் மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500

* பேரூராட்சி மன்றத் தலைவர் ரூ.5 ஆயிரம்

* பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500

* மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரம்

* ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் ரூ.3 ஆயிரம் என விருப்ப மனு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

click me!