
ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில், அவர் ஒருவர் மட்டுமே அதிகார மையமாக இருந்தார். எதுவாக இருந்தாலும், போய் சேர வேண்டிய இடம் போயஸ் தோட்டமாகவே இருந்தது.
அவர் இறந்த பின்னர், அந்த அதிகாரம் மையங்கள் பரவலாக்கப்பட்டு விட்டது. குறிப்பாக, டெண்டர் முதல் கமிஷன் வரை சசிகலா குடும்பத்து உறவுகளுக்கு, அது நேரடியாக போய் சேர ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில், சசிகலாவும், தினகரனும் சிறைக்கு சென்ற பின்னர், அந்த அதிகார மையங்களின் எண்ணிக்கை அதிகமாகவும், பரவலாகவும் ஆகிவிட்டது.
குறிப்பாக, அதிகாரிகளும், கப்பம் கட்டும் வர்த்தக மையங்களும், தங்களுடைய தொடர்புகளை நேரடியாக சசிகலா குடும்பத்துடன் வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன.
சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலரும், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, நேரடியாகவே டீலிங் வைத்திருப்பதால், முதல்வருக்கு தெரியாமலே பல டீலிங் முடிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதனால், சில துறைகளில், அமைச்சர்களுக்கே தெரியாமல், இந்த டீலிங்குகள் நடைபெற்று வருவதால், அவர்களுக்கு செல்ல வேண்டிய கமிஷன் நின்று போய் இருக்கிறது.
அதன் காரணமாக அதிருப்தியில் உள்ள அமைச்சர்கள், தங்கள் துறையில், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.
தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயன கலப்பு இருப்பதாக, திடீரென எழுந்த குற்றச்சாட்டும், அந்த வகையில் வெளியானதுதான் என்று சொல்லப்படுகிறது.
தங்களுக்கு வர வேண்டிய கமிஷன் நின்று போனதால், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அமைச்சர்கள், சோதனை என்ற பெயரில் களம் இறங்குவதும், அதனால் சர்ச்சைகள் எழுவதற்கும் பின்னணியில், கமிஷன் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம், முதல்வர் எடப்பாடிக்கும் சிக்கலை உருவாக்கி வருகிறது. முதல்வர் அவர்தான், ஆனால், அவருக்கு உள்ள அதிகாரத்தை நான் வைத்திருக்கிறேன் என்ற பாணியில் அதிகார மையங்கள் செயல் பட்டு வருகின்றன.
முதல்வர் கைகளில் இருக்கும் துறைகளின் வழியாக வரும் வருவாயை தவிர, அவருக்கும் மற்ற துறைகளில் இருந்து வருவாயோ, கமிஷனோ கிடைப்பதில்லையாம். அதனால், அவருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஆட்சியையும், முதல்வர் பதவியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அமைச்சர்கள் பலரது நிலையும் அப்படியே இருக்கிறது.
இது, எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்த போகிறதோ, என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில்தான், தனியார் பால் விவகாரத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூபத்தில், அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இன்னும் சில நாட்களில், மற்ற அமைச்சர்களும், ராஜேந்திர பாலாஜி வழியில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள், அப்போது இந்த சர்ச்சை இன்னும் பெரிய அளவில் வெடிக்கும் என்கிறது கோட்டை வட்டாரம்.