
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக புதிய சட்டத்தைக் கொண்டு வர கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடும் எதிர்ப்பு
இறைச்சிக்காக பசு, எருமை, எருது, காளை, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு கடந்த சனிக்கிழமை தடை விதித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாநில அரசுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல் பினராயி விஜயன் கடிதம் அனுப்பினார்.
புதிய சட்டம்
அந்தக் கடிதத்தில், "கேரள மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தீர்மானிக்க தேவையில்லை' என பினராயி விஜயன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த உத்தரவை செல்லாதாக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக கேரள உள்துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தெரிவித்துள்ளார்.
கருப்பு தினம்
இதனிடையே, மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.