முதலமைச்சராக சபாநாயகர் தனபால் பொறுப்பேற்றால் ஆட்சேபனை இல்லை என டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் உசுப்பேத்திவிட்டு வரும் நிலையில், சபாநாயகர் அறைக்கும் முதலமைச்சர் அறைக்கும் அமைச்சர்கள் நடையாய் நடக்கின்றனர். இதனால் சபாநாயகர் தனபாலுக்கு முதலமைச்சராகும் திட்டம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என எடப்பாடி தரப்பு அறிவித்ததையடுத்து தொடர்ந்து பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. எடப்பாடி அணியை சேர்ந்த வைத்தியலிங்கத்தின் அறிவிப்புக்கு பிறகு அதிமுக பதவியில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்து நிர்வாகிகளை நீக்கி வருகிறார் டிடிவி. இதனிடையே டிடிவி தினகரனுடன் மோதலில் இருந்த திவாகரன் திடீரென ஆதரவு கரம் நீட்ட ஆரம்பித்தார். அதனைதொடர்ந்து கட்சியை மீட்க வேண்டும் என்ற டிடிவியின் நம்பிக்கை மேலும் கூடியுள்ளது என்றே சொல்லலாம். எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து விட்டது என்று டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்து பேட்டியளித்தனர். அப்போது தஞ்சையில் பேட்டியளித்த திவாகரன், சபாநாயகர் தனபால் தான் முதல்வராக வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் டிடிவி தினகரன் தரப்பும் அதே கூற்றையே வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில், அதை முறியடிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபாலுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதைதொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறைக்கும் முதலமைச்சர் அறைக்கும் சென்று மாறி மாறி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் எடப்பாடி இடத்தை பிடிக்க சபாநாயகருக்கு விருப்பமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.