
பன்னீர் அணியில், அவரது மனசாட்சியாக கே.பி.முனுசாமி ஒலிப்பது போல, எடப்பாடி அணியில், அவரது மனசாட்சியாக ஒலித்து கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார்.
முதல்வர் எடப்பாடி எதையும் தன்னிச்சையாக முடிவெடுத்து விடுவதில்லை. எதுவாக இருந்தாலும், அமைச்சர் ஜெயகுமாரிடம் கலந்து பேசித்தான் எதையும் செய்கிறார்.
ஆனால், எடப்பாடி எதையும் வெளிப்படையாக சொல்வதில்லை. அவருக்கு பதில், அவர் சொல்ல வேண்டியதை சொல்பவர் ஜெயக்குமார் மட்டுமே.
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் அணிதிரண்டது தொடங்கி, அவருக்கு எதிராக கருத்து சொல்வது வரையில், அது அமைச்சர் ஜெயக்குமார் மூலமாக மட்டுமே வெளிப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு இரவு பத்து மணி அளவில் அமைச்சர் செங்கோட்டையனும், வேலுமணியும் சென்று சந்தித்து, தினகரானால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதித்துள்ளனர்.
அப்போது, தினகரன் நெருக்கடி கொடுக்கட்டும். இது நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுதானே. அவர் நெருக்கடிக்கு பயந்து, அவர்களை நாம் கட்சியில் சேர்த்து கொண்டால், மக்கள் நம்மை மதிக்க மாட்டார்கள் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நம்மை எதிர்த்து அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆட்சியை கவிழ்த்தாலும் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. எனவே, ஆட்சியை கவிழ்க்கும் முடிவையும் அவர்களால் எடுக்க முடியாது.
அவர்கள் கேட்பது போல, அமைச்சரவையில் நாம் யாருக்கும் இடம் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால், நாம் அவர்களுக்கு பணித்ததுபோல் ஆகிவிடும்.
அத்துடன், இப்போது நாம், தினகரன் மிரட்டலுக்கு பணிந்தால், பிறகு நாம் எப்போதும் கட்சியை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியாது என்றும் கூறி இருக்கிறார் ஜெயக்குமார்.
இதை முதல்வர் ஏற்று கொள்வாரா? என்று வேலுமணி கேட்க, அதற்கு, நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது எனக்கு சம்மதம் என்று அவர் ஏற்கனவே கூறி இருக்கிறார் என்று ஜெயக்குமார் பதில் சொல்லி இருக்கிறார்.
அதன் பிறகே, எது நடந்தாலும், தினகரன் மிரட்டலுக்கு பணிந்து விட கூடாது என்பதில், எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் அனைவரும் ஒரே முடிவில் இருக்கின்றனர்.