
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அணி, பன்னீர் அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது. சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அந்த அணி எடப்பாடி அணியாக மாறியது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், தினகரன் சிறைக்கு சென்று ஜாமினில் வருவதற்குள், அதிமுகவில் தினகரன் அணி என்று மூன்றாவதாக ஒரு அணி முளைத்து விட்டது. தற்போதய தினகரன் அணியில் 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அமைச்சர் மற்றும் வாரிய தலைவர் கனவில் மிதக்கும் சிலரே தினகரன் அணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமக்கு ஆதரவாக திரண்டுள்ள எம்.எல்.ஏ க்களின் கோரிக்கைகளை எல்லாம் விரைவில் நிறைவேற்றி கொடுப்பதாக தினகரன் உத்திரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும், தினகரனை பார்த்து ஆதரவு தெரிவித்த மறு நாள், எடப்பாடியை சந்தித்து பேசி இருக்கிறார்.
அப்போது, நீ கூட அங்கு போய் பேட்டி கொடுக்கும் அளவுக்கு ஆகிவிட்டாயா? என்று கேட்டுள்ளார் எடப்பாடி. மேலும், நான் வகிப்பது முதல்வர் பதவி. இதற்கு மேல் வேறு எந்த உயர்ந்த பதவியும் இல்லை என்று அவரிடம் எடப்பாடி கூறி இருக்கிறார். இனி தமிழக வரலாற்றிலும், பாட புத்தகத்திலும் என் பெயர் வந்து விடும். இறந்தாலும் 21 குண்டு முழங்க அடக்கம் செய்வார்கள். ஆனால் உன்னுடைய நிலைமை அப்படி இல்லை.
எனக்கு எதிராக பேசிவிட்டு நீ வீட்டுக்கு போனால், உன் குடும்பம் கூட உன்னை மதிக்காது. தொகுதி பக்கமும் தலை காட்ட முடியாது என்று எடப்பாடி கூறி இருக்கிறார். மேலும், இந்த ஆட்சி கவிழ்ந்தால், எந்த வகையிலும் எனக்கு நஷ்டம் இல்லை. தினகரனுக்குதான் நஷ்டம் என்று வெளிப்படையாகவே கூறி உள்ளார்.
அந்த நேரம் பார்த்து, அவருடைய செல்பேசியில் திவாகரன் அழைக்க, எம்.எல்.ஏ விடம் பேசிய அதே வார்த்தைகளை ரிப்பீட் பண்ணிய எடப்பாடி, அவரை அமைதியாக இருக்க சொல்லுங்கள், ஆட்டம் போட்டால், எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை என்று உரக்க சொல்லி இருக்கிறார்.
அதை கேட்டு மறுமுனையில் கொஞ்சம் சுருதி குறைந்து இருக்கிறது. பின்னர் வெளியில் வந்த, சேலம் மாவட்ட எம்.எல்.ஏ, ஆட்சியில் கொங்கு மண்டலத்தின் கையே தற்போது ஓங்கி இருக்கிறது. மன்னார்குடியின் குரல் ஒடுங்கி விட்டது என்று அனைவரிடம் கூறி இருக்கிறார்.