'எத்தனையோ பேரை காப்பாற்றியிருக்கேன்.. ஆனா உன்ன பறிகொடுத்துட்டனே'..! உதவியாளர் மரணத்தால் உடைந்துபோன அமைச்சர் விஜயபாஸ்கர்..!

By Manikandan S R S  |  First Published Jan 12, 2020, 3:48 PM IST

சாலை விபத்தில் சிக்கி சாகக்கிடந்த பலரைக் காப்பாற்றி மகிழ்ச்சி கொண்ட என்னால் உன்னைக் காப்பாற்ற வாய்ப்பில்லாமல் போயிற்றே என் நேசத்திற்குரியவனே.. விபத்து நிகழ்ந்த இடங்களில் ஓடோடிச் சென்று உதவிய உன்னை விபத்தில் பறி கொடுப்பேனென்று எண்ணவில்லையே என் இனிய இளைஞனே... 


தமிழக சுகாதார துறை அமைச்சராக இருப்பவர் விஜய பாஸ்கர். புதுக்கோட்டையைச் சேர்ந்த இவருக்கு தனி உதவியாளராக வெங்கடேசன் என்பவரும் கார் ஓட்டுநராக செல்வம் என்பவரும் பணியாற்றி வந்தனர். நேற்று புதுக்கோட்டையில் அதிமுக சார்பாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் வாழ்த்து கூறிவிட்டு இரவு விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார். 

Tap to resize

Latest Videos

அமைச்சரை வெங்கடேசன் மற்றும் செல்வம் திருச்சி விமானநிலையத்தில் விட்டுவிட்டு ஊர்திரும்பும் போது கிளிக்குடி அருகே நடந்த விபத்தில் இருவரும் பலியாகினர். இது அமைச்சர் விஜயபாஸ்கரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. இருவரது மரணத்திற்கும் இரங்கல் தெரிவித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் முகநூல் பக்கத்தில் கவிதை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

"வெங்கடேசா...என்னுயிர் தம்பி...என் துணைக்கரமே.. ஏனப்பா உனக்கிந்த அவசரம் ? என்னிடம் சொல்லாமல் எங்கும் செல்லமாட்டாயே ...சொல்லாமல் கொள்ளாமல் விண்ணகம் சென்றுவிட்டாயே... எப்படி தாங்குவேனப்பா? பத்து ஆண்டுகளுக்கும் மேலாக என்னில் பாதியாகி என்னோடு பயணித்தாயே... பாதியில் இறங்கிப் போய்விட்டாயே என் நம்பிக்கையே...

புதுகையில் கிடைத்த வெற்றியின் ஆதாரமே நீதானப்பா... வெற்றி மாலையை எங்களுக்குத் தந்துவிட்டு மரணமாலையை நீ சூடிக்கொண்டாயே என் அன்புத்தம்பியே! ஆயிரம் கரங்கள் உறுதுணையாக இருந்தபோதும் உன் கரங்கள்தானே தும்பிக்கை எனக்கு ? போய்விட்டாயே என் பாச மகனே... என் பார்வையின் பொருளறிந்து பம்பரமாய் சுழலும் நீ என்னை பரிதவிக்கவிட்டு போனதென்ன என் சுறுசுறுப்பே.... விழியிழந்ததுபோல் துடித்துக் கிடக்கிறேனடா....

எதிலும் நிதானம் காட்டி சிந்தித்து செயலாற்றும் நீ மரணத்தில் மட்டும் அவசரம் காட்டி என்னை கதறச் செய்துவிட்டாயே கண்ணே... ஓய்வின்றி உழைத்த நீ இளைப்பாறச் சென்றுவிட்டாயே என் ஆற்றலே.... சாலை விபத்தில் சிக்கி சாகக்கிடந்த பலரைக் காப்பாற்றி மகிழ்ச்சி கொண்ட என்னால் உன்னைக் காப்பாற்ற வாய்ப்பில்லாமல் போயிற்றே என் நேசத்திற்குரியவனே..

விபத்து நிகழ்ந்த இடங்களில் ஓடோடிச் சென்று உதவிய உன்னை விபத்தில் பறி கொடுப்பேனென்று எண்ணவில்லையே என் இனிய இளைஞனே... அப்பா என அழைக்கும் உன் பாசப் பிள்ளைக்கு என்ன மறுமொழி சொல்வதடா தம்பி! கண்ணீர் வழிய உனக்கு ஒரு இரங்கல் செய்தி எழுதவைப்பாய் என்று எண்ணவில்லையே என் சொந்தமே...நீயின்றி எப்படி இயங்குவேனப்பா? இரங்காமல் கொண்டு போய்விட்டானே காலன்... இரக்கமற்ற இறைவன் உன்னை தன்னருகே இருத்திக் கொண்டு என்னை துடிதுடிக்க வைத்துவிட்டானே!
நெஞ்சார்ந்த கண்ணீர் அஞ்சலி என் அன்பு தம்பி"..!!

இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கரின் முகநூல் பக்கத்தில் உருக்கமான கவிதை வெளியிடப்பட்டுள்ளது.

click me!