ஸ்டாலின் இருக்கும் போதே இன்னொரு தளபதியா..? ஸ்கெட்ச் வேலுமணிக்கா? செந்தில் பாலாஜிக்கா..?

By Thanalakshmi VFirst Published Jan 21, 2022, 7:22 PM IST
Highlights

கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய அடைமொழியாக கொங்குமண்டல தளபதி அமைச்சர் செந்தில்பாலாஜி என்று விழா கமிட்டியினரால் கொடுக்கப்பட்ட பட்டம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழகத்தை பொறுத்தவரை திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தாலும் கொங்கு மண்டலமான கோவையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. மேலுமணி கோட்டையாக விளங்கி வரும் கோவையில் திமுகவை பலபடுத்த வேண்டும் என்று அந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளராக அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அரசியலில் நேருக்கு நேர் மோதி கொள்ளுவதில் அமைச்சர் செந்தில்பாலாஜி தான் சரியான நபராக இருக்கும் என்று கணித்த அறிவாலயம், கோவையை திமுக கோட்டையாக மாற்றும் அசைன்மெண்டை அவருக்கு கொடுத்துள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை கொங்குமண்டலத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் ஆளுமையாக உள்ளனர். இவருக்கு போட்டியாக செந்தில்பாலாஜி களத்தில் இறக்கியுள்ளது திமுக. கொங்கை கைப்பற்றும் முனைப்பில் பல்வேறு வீயூகங்களை வகுத்து வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதன்படி, சமீபத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மாநாட்டில் பங்கேற்கும் அளவிற்கு மக்கள் கூட்டத்தை திரட்டி இருந்தார் அமைச்சர். இதில் பூரித்து போன முதலமைச்சர் மேடையில் பேசும் போது அமைச்சரை பாராட்டி மகிழ்ந்தார்.

இதோடு நிற்காமல் அமைச்சர் செந்தில்பாலாஜி, வரும் போகும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.  அதற்காக பகல், இரவு பாராமல் மக்களை சந்திப்பது, நலத்திட்ட உதவிகள் செய்தல் போன்று களத்தில் விடாமல் இறங்கி அடிக்கிறார்.

இந்நிலையில் தான் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கொங்கு மண்டல தளபதி அமைச்சர் எனும் புதிய அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது விவாத பொருளாக மாறியுள்ளது.கோவை மாவட்டம் நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவானது இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. ஜல்லிக்கட்டு விழாவை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

கொரோனா பேரிடர் காலம் என்பதால், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. தொலைகாட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டுநடைபெறும் பகுதியில், 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி, முழுமையாக அங்கேயே இருந்து அமைச்சர் மூர்த்தி பாணியை கடைபிடித்து வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தங்ககாசுகளை பரிசாக அள்ளிக்கொடுத்தார். அப்போது அவரை புகழும் வண்ணம், ''கொங்கு மண்டல தளபதி அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கும் பரிசு'' என்றே விழாக் குழு சார்பில் அடைமொழியுடன் அழைக்கப்பட்டது.

தன்னை கொங்கு மண்டல தளபதி என விழாக் குழுவினர் அழைத்த போதெல்லாம் அமைச்சர் செந்தில்பாலாஜி அருகில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கு முதல் பரிசாக ஆல்டோ காரும், இரண்டாம் பரிசாக யமஹா பைக்கும், மூன்றாம் பரிசாக ஒரு பவுன் தங்கக்காசும் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னின்று நடத்திய இந்த கோவை செட்டிப்பாளையம் ஜல்லிக்கட்டில் கோவை முக்கிய திமுக நிர்வாகிகள் பலரும் மிஸ்ஸிங். கமல் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்திரன், அருகாமை மாவட்டமான திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகியான ஜெயராமகிருஷ்ணன், கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாதிபதி ஆகியோர் மட்டுமே அங்கு இருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநகர் மாவட்டச் செயலாளருமான சிங்காநல்லூர் கார்த்திக் பட்டும் படாமலும் மேடையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் பாதி, என பல பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்நிலையில் கோவை மாவட்டத்துக்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை, கொங்கு மண்டல தளபதி என அழைக்கப்பட்டிருப்பது தான் இப்போது கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.

click me!