மதவெறிக்கு ஒரு எல்லையே இல்லையா? கொரோனாவிலும் அடங்காத கி.வீரமணி.

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2022, 6:17 PM IST
Highlights

மதவெறிக்கு ஓர் எல்லையே இல்லையா என்றும், உத்தராகண்டில் நடந்த வி.எச்.பி. கூட்டத்தில் இஸ்லாமியருக்கு எதிராக அருவெறுப்பு பேச்சு பேசப்பட்டிருக்கிறது என்றும், இஸ்லாமியருக்கு எதிரான பேச்சால் நாம் நாகரிக காலத்தில் வாழ்கிறோமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மதவெறிக்கு ஓர் எல்லையே இல்லையா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தராகண்டில் நடந்த வி.எச்.பி. கூட்டத்தில் இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்பு பேச்சு  பேசப்பட்டிருக்கிறது என்றும், இஸ்லாமியருக்கு எதிரான பேச்சால் நாம் நாகரிக காலத்தில் வாழ்கிறோமா என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

இந்துக்களையும் இந்து மதத்தையும் நாம் காப்பாற்ற வேண்டுமென்றால் இஸ்லாமியர்கள் கொல்லப்படவேண்டும் என உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் மாநாட்டில்  இந்து இயக்கத் தலைவர்கள் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை பல்வேறு இடதுசாரி ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள் கண்டித்து வருகின்றனர். வட இந்தியாவில் ஹரித்வார் நகரில் டிசம்பர் 17 முதல் 19 வரை இந்துத்துவா இயக்கத் தலைவர்களின் மாநாடு நடைபெற்ற நிலையில் சிறுபான்மையினரை கொல்லவும் அவர்களின் வழிபாட்டு தளங்களை தகர்க்கவும் இந்துக்கள் திரண்டு முன்வர வேண்டுமென அதில் கலந்து கொண்டவர்கள் பேசியுள்ள நிலையில் கி. வீரமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

மோடி தலைமையிலான ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு வகைகளில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால் " சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்மைத்துவ நெறிமுறைகளுக்கு மரியாதை உட்பட ஜனநாயக உணர்வு இந்தியர்களிடம் வேரூன்றியுள்ளது" என்று அமெரிக்கா நடத்திய ஜனநாயக உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் கூறியதாக நாளேடுகளில் செய்தி வெளியானது. ஆனால் அவர் அவ்வாறு பேசிய ஓரிரு வாரத்திற்குப் பிறகுதான் இந்துத்துவ தலைவர்கள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்த இந்து மக்களே திரண்டு வாருங்கள் என அழைப்பு விடுத்தும் பேசிய சம்பவம் இந்தியாவில் நடந்தது.  இதுதான் சகிப்புத்தன்மை பன்முகத்தன்மையா என பலரும் பாஜகவை கேள்வி எழுப்பி வருகின்றனர். சகிப்புத்தன்மை கொண்ட நாடு என பேசும் மோடி இந்துத்துவ தலைவர்களின் வெறுப்பு பேச்சை தடுக்க தவறிவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. 

2014 இல் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டவிரோதமாக பசுக்களை கடத்தியதாகவும், அல்லது மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக சந்தேகத்தின் பெயரில் பல்வேறு இஸ்லாமிய மற்றும் தலித் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகிறது. தீவிர இந்து வலதுசாரி குழுக்கள் இஸ்லாமியர்கள் "லவ் ஜிகாத்" தில்  ஈடுபடுவதாகக் கூறி அவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். covid-19 இந்தியாவில் பரப்பியதாக இஸ்லாமியர்கள் மீது பாஜக ஆதரவாளர்களால் கடும் குற்றஞ்சாட்டை முன்வைத்தனர். இந்தியாவில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். சிஏஏ எனும் இந்திய குடியுரிமை சட்டம் திருத்த மசோதிவை கொண்டு வந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான  நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் மோடி அரசுக்கு எதிராக இருந்து வருகிறது. இப்படி மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் சந்தித்து வரும் துயரங்கள் பலபல. 

இந்த இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியில்தான் மோடி அரசாங்கத்துடன் தொடர்புடைய பல தீவிர வலதுசாரி குழுக்களின் தலைவர்கள் இந்தியாவில் சிறுபான்மையினரை குறிப்பாக நாட்டில் 200 மில்லியன் முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும், அதற்கு இந்துக்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்து பேசியுள்ளனர். அதற்கான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. வட இந்தியாவின் ஹரித்வார் நகரில் டிசம்பர் 17 முதல் 19 வரை  சர்ச்சைக்குரிய இந்துத்துவா தலைவர்களில் ஒருவரான யதி நரசிங்கானந்த் இந்துத்துவா தலைவர்களை திரட்டி 3 நாள் மாநாடு ஒருங்கிணைத்தார். அதில் பல்வேறு இந்து இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய இந்து ரக்ஷா சேனாவின் தலைவர் சுவாமி பிரபோ தானந்த் கிரி, இந்துக்களையும் இந்து மக்களையும் பாதுகாக்க  நாம் சில தயாரிப்புகளை செய்ய வேண்டும். அவை என்னென்ன ஏற்பாடுகள் என்பதை நான் உங்களுக்கு தெளிவு படுத்துகிறேன், நான் சொல்வதுதான் இறுதி தீர்வு. இந்த தீர்வை பின்பற்றினால் நமக்கு நல்ல பாதை அமையும்.  மியான்மரில் ரோஹிங்கியாக்கள் விரட்டியடிக்கபட்டார்கள். அரசும், அரசியல்வாதிகளும், காவல்துறையும் அதை முன் நின்று செய்தது. அதுபோல நாமும் செய்ய வேண்டும் என்று பேசினார். 

இதேபோல், இந்த மாநாட்டில் நிரஞ்சனி அகதாவின் மகாமண்டலேசுவரர், இந்து மகாசபையின் பொதுச்செயலாளருமான பூஜா ஷாகுன் பாண்டே என்ற சாத்வி பிரக்யா சிங் தாகூர். இந்துக்கள் ஆயுதம் ஏந்தி வரவேண்டும் என அழைப்பு  விடுத்துப் பேசினார். ஆயுதங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியம் இல்லை, நீங்கள் அவர்களின் மக்கள் தொகையை குறைக்க விரும்பினால் அவர்களைக் கொல்ல வேண்டும். அவர்களைக் கொல்லவும் சிறை செல்லவும் தயாராக இருங்கள். நாம் 100 பேர் 20 லட்சம் முஸ்லிம்களை கொள்ள தயாராக  இருந்தாலும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். நாதுராம் கோட்சேவை போல நான் தயாராக இருக்கிறேன் என்று பேசினார். இதே போல இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். அவர்களின் பேச்சு நாடு முழுவதும் அதிர்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஹரித்துவார் மாநாட்டு பேச்சை கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார். மதவெறிக்கு ஓர் எல்லையே இல்லையா என்றும், உத்தராகண்டில் நடந்த வி.எச்.பி. கூட்டத்தில் இஸ்லாமியருக்கு எதிராக அருவெறுப்பு பேச்சு பேசப்பட்டிருக்கிறது என்றும், இஸ்லாமியருக்கு எதிரான பேச்சால் நாம் நாகரிக காலத்தில் வாழ்கிறோமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். அதில் கலந்து கொண்டவர்களின்  பேச்சை கேட்டு நாடே வெகுண்டு எழுந்துள்ள நிலையில் பாஜக தலைவர்கள் எவரும் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை என்று கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார்.  
 

click me!