மக்களே வாங்க வேண்டியதை இப்பவே வாங்கி வச்சுக்குங்க.. வர்ற ஞாயிற்று கிழமையும் ஊரடக்காம்..

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2022, 5:26 PM IST
Highlights

மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமெடுத்து வரும் நிலையில் வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த வாரங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறை பின்பற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது.   

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. முதல் அலை, இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலை வேகமாக பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கட்டுப்பாடு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு சில நாட்கள் வைரஸ் தொற்று குறைந்து வந்த நிலையில், திடீரென வைரஸ் தொற்று பன்மடங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு  ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில் வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரித்திருந்தார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு வைரஸ் தொற்று வேகமாக பரவும் என்றும் மக்கள் அஞ்ச தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவுகிறது அல்ல எகிறி வருகிறது என்றே சொல்லலாம். கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 561 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் பாதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

அதாவது கடந்த ஆறாம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ஜனவரி 9, 16 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது. இந்த உத்தரவு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று குறையும் பட்சத்தில் வார இறுதி நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் திடீரென வேகம் எடுத்துள்ளதால் குறிப்பாக சென்னையில் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளதால் வரும் ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் தேதியும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதேபோல கடந்த 16ஆம் தேதி அதாவது காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது, காணும் பெங்கலுக்கு ஊரடங்கை தளர்த்த வேண்டும் என பலரும் கோரி வந்தனர் ஆனால்  அரசு தளர்த்தவில்லை, அதாவது பொங்கல் நேரத்தில் மக்கள் அதிகம் கூட்டம் கூடுவர் என்பதால் லாக் டவுன் அன்று முழுமையாக பின்பற்றப்பட்டது.

இந்நிலையில்தான் கொரோனா வைரஸ் குறைய தொடங்கி இருப்பதால், ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழு ஊரடங்கு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு :- தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண் 30 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 12 -1-2022 -2ன் படி கடந்த 16-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23-1-2022, அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும், கடந்த ஞாயிற்று கிழமைகளில் கடைபிடிக்கப்பட்ட அதே நடைமுறைகள் அடுத்த ஞாயிற்று கிழயை ஊரடங்கில் கடை பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும். வாடகை கார்கள் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும், மாவட்ட ரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!