
அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது என முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, கடந்த ஆட்சியில் ஊழல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடு மற்றும் அவரது அலுவலகம், உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான தங்கமணியின் வீடு ,உறவினர்கள் வீடு உள்ளிட்ட 69 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதிமுக நடத்தும் போராட்டத்தில் தங்கமணி கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திமுகவை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
இந்நிலையில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தங்கமணி;- திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை ரூ .10 வரை குறைத்துள்ளது. தமிழக அரசு பெயரளவுக்கு ரூ.4, ரூ.5 என்ற அளவில் குறைத்து விட்டு விலையை குறைத்ததாக மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. காவல்துறைக்கே உரிய பாதுகாப்பு இல்லை. கடந்த ஆறு மாதத்தில் 557 கொலைகள் நடந்துள்ளன.
அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என்பது நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்த அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. என்னுடைய வீட்டில் நடந்த சோதனைக்கு தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிதான் காரணம். அவருடைய சுயரூபம் திமுகவுக்கு தெரியவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் போக போக அவரை பற்றி தெரிந்து கொள்வார்.
நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுகவுக்கு நாம் யார் என்பதை காட்ட வேண்டும். அதிமுக தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கின்றதோ அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.