அதிமுக மீது அவதூறு பரப்பினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்… எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!!

Published : Dec 17, 2021, 03:04 PM ISTUpdated : Dec 17, 2021, 03:05 PM IST
அதிமுக மீது அவதூறு பரப்பினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்… எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!!

சுருக்கம்

அதிமுக மீது அவதூறு பரப்பினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் திமுகவின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டோம் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக மீது அவதூறு பரப்பினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் திமுகவின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டோம் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக  அலுவலகத்தில் கடந்த 15 ஆம் தேதி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் அதற்கு எதிராக தமிழகம் முழுவதும் 17 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும்  தெரிவித்தார். இதை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், தேனியில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  பேசிய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் என்று சொன்னால் அது அதிமுக கோட்டை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் காலத்திலும் சரி, புரட்சி தலைவி  அம்மாவின் காலத்திலும் சரி, இப்போதும் சரி, சேலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. அதிமுக-வை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது. எங்களை யாராலும் அசைக்க முடியாது. ஏன் ஒரு தொண்டனை கூட தொட்டு பார்க்கமுடியாது.  திமுக அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கினார்கள். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இது  தொடர்பாக அதிமுக பலமுறை குரல் கொடுத்தும் விடியாத அரசு செவி சாய்க்கவில்லை . அவர்களுக்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு எங்கள் ஆட்சியில் வழங்கியது  போல் அடுத்த ஆண்டும் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 வழங்க வேண்டும். அதிமுகவை வீழ்த்த நினைத்தால் வீழ்ந்து போவார்கள்.

அழிக்க நினைத்தால் அடையாளம் இல்லாமல் போவார்கள். 7 மாத கால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளது திமுக. தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு  விரைந்து நிறைவேற்றவில்லை எனில் அதனை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களை தொடருவோம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் நாங்கள் பயப்படமாட்டோம். எங்கள் ரத்தத்திலேயே வீரம் ஊறியுள்ளது. அதிமுக மீது அவதூறு பரப்பினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். எங்களை தொந்தரவு செய்தால் எதையும் சந்திக்க தயார், திமுகவின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டோம், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்கள் பணி தொடரும் என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!