சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், மேல்முறையீடு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால் பலனற்றதாகிவிடும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் ஒரு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதை திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். ஆனால், அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நீதிபதி அவசல வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்தனர். நாளை இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.