புழல் சிறையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதி கொண்டு விசாரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்வையும், தமிழக அமைச்சர்கள் செய்யும் ஊழலை தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. அதிமுக சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்கள் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் கேரட், வெண்டக்காய், பச்சை மிளகாய், தக்காளியால் செய்யப்பட்ட மாலையை அணிந்துக்கொண்டு ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். மேலும் மகளிர் அணியினர், பாடை கட்டி, அதன் மீது காய்கறிகளை வைத்து, பால் ஊற்றி ஓலமிட்டனர்.
ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகரம் கொலை மாநகரமாக உள்ளதாகவும் இதை தடுக்காமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஜனநாயக விரோத செயலில் அரசு ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இதுபற்றியெல்லாம் அறியாத முதலமைச்சர், ஆசியாவிலேயே தன் குடும்பத்தை பணக்கார குடும்பமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாக விமர்சித்தார். செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர்கள் ஓவ்வொருவராக விசாரணை வளையத்துக்குள் வருவதை பார்த்தால் அடுத்த அமைச்சரவை கூட்டத்தை சிறையில் தான் நடத்த வேண்டிய சூழல் உள்ளதாக பேசினார். திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என முன்கூட்டியே அறிந்து தான் சிறையில் உணவு வகைகள் மாற்றியமைக்கப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், செந்தில்பாலாஜிக்கு சிறையில் ஏசி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதி கொண்டு விசாரனை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ரவீந்திரநாத் குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக இரண்டு முறை கடிதம் கொடுத்துவிட்டதாகவும், அவருக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை எனவும், இதுகுறித்து நாடாளுமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.