கடந்த கால தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அதிமுகவினருக்கு ‘அட்வைஸ்’ செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி !

By Raghupati RFirst Published Dec 5, 2021, 2:04 PM IST
Highlights

‘அதிமுகவினர் கடந்த காலங்களில் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் ஃபவுண்டேஷன் (சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் பேசிய அவர், ‘ மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்திட வேண்டும் என்ற நோக்கோடு முதல்வர் செயல்பட்டு வருகின்றார்.

வீடுவாரியாக சென்று மாற்றுத்திறனாளிகள் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது’ என்று கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘முதல்வரின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

நேற்று கோவை மாவட்டத்தில் 45 நிமிடம் பெய்த கன மழையில் 71 மி.மீ கனமழை பெய்து இருக்கிறது. இதனால் கோவையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது போக்குவரத்தை சீர் செய்யப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் மழை காலங்களுக்காக திட்ட வரைவு அறிக்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.  

அது முடிந்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நடைபெறம். மாற்றுத் திறனாளிகளுக்கு  என்று வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தந்த டெண்டர் விபரங்கள் தெளிவாக இல்லை. அதில் ஏராளமான முரண்பாடுகள் இருக்கிறது. அதே சமயம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஆட்சியின் பொழுது பல பணிகள் துவங்கப்படவில்லை. அதற்கு காரணம் நிதி ஆதாரம் இல்லை என்பதுதான்.

கடந்த ஆட்சியின் பொழுது டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் நிதி இல்லை என்பதால் பணிகளை விட்டு விட்டுச் சென்றிவிட்டதாக தெரிவித்தார்கள்.  தேர்தல் நேரங்களில் தீர்மானங்கள் இல்லாமல் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. தேர்தலுக்கு முன்னரே சாலைகள் பராமரிக்க வேண்டும் என்ற சிந்தனை ஏன் கடந்த ஆட்சியாளர்களுக்கு வரவில்லை என்று தெரியவில்லை. தற்பொழுது முதல்வர் 200 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீரால் சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய நிதி அளித்திருக்கிறார். சூயஸ் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலைவாழ் மக்களின் அன்றாடத் தேவைகளான மின்சாரம், சாலை வசதிகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.மாற்றுத்திறனாளிகள் பயனாளர் அட்டைகள் பெறுவதில் உள்ள சிரமங்களை களைவதற்கு வீடு வாரியாக ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.இது மக்களுக்கான அரசு’ என்று பேசினார்.

click me!