நள்ளிரவில் மின் அலுவலகங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு.. குடிபோதையில் இருந்த ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்.

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2021, 7:44 AM IST
Highlights

கட்டுபாடு அறைக்கு சென்ற அமைச்சர், அங்கு நிகழும் பணிகளை ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, பொதுமக்கள் ஒருவரிடம் தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக அழைப்பு எடுத்த அமைச்சர் அந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும  படி அதிகாரிகளிடம் கூறினார்.

தமிழகத்தில்  திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் மின்வெட்டு ஏற்படுவதாக அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், நேற்று நள்ளிரவு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இது மின்சாரத்துறை வாரிய அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆய்வின் போது பணியில் மதுபோதையில் இருந்த ஊழியர் ஒருவரையும் அமைச்சர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது அத்துறையில் ஆஜாக்கரதையாக செயல்படும் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. பல்வேறு துறைகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அதிரடியாக அறிவித்து திமுக அரசு வெகு மக்களின் பாராட்டை பெற்று வருகிறது. இருக்கும் அத்தனை துறைகளிலும் மிகுந்த சவால் நிறைந்த துறையான மின்சாரத் துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பை உணர்ந்து அமைச்சர் 24 மணி நேரமும் சுற்றிச் சுழன்று அத்துறையை சீர்படுத்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். அதிமுக ஆட்சியின்போது மின்சார கட்டமைப்புகள் முற்றிலும் சரியாக பராமரிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவைகளை புனரமைக்கும் பணியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
 

இதற்கிடையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் படுவதாக தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதற்கான  காரணங்களை ஆதாரங்களுடன் அமைச்சர் வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகிறார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் எதிர்க்கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நள்ளிரவு 11 மணியளவில் அதிரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியம் தலைமை அலுவலகத்திற்கு விசிட் செய்தார். அமைச்சரின் வருகையை எதிர்பாராத அலுவலர்கள் மிகுந்த ஷாக் ஆகினர். திடீரென மின்சார வாரிய தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அவர் அவரும் பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் முறையாக கையாளப்படுகிறது என்பதையும் கண்காணித்தார்.

அவராகவே தொலைபேசி அழைப்புகளை எடுத்து பொது மக்களிடம் புகார்களை  பெற்றதுடன், உடனே அவைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால் மின்சார வாரிய தலைமை அலுவலகம் நள்ளிரவு பரபரப்பாக காணப்பட்டது.பின்னர் திடீரென அங்கிருந்து வடசென்னையில் கொருக்குப்பேட்டைக்கு விரைந்த அவர், அங்கு துணைமின் அலுவலகத்தை பார்வையிட்டார். அமைச்சரின் வருகையை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் ஆடிப் போயினர். அப்போது அங்கு மதுபோதையில் பணியில் ஈடுபட்டிருந்த ஜெகன் என்ற ஊழியரை அமைச்சர் உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் வட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வு மேற்கொண்ட அவர், தண்டையார்பேட்டை, எம்கேபி நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மின் இணைப்புகளை சரி செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் மின்சார துண்டிப்பு ஏற்படுவதாக புகார் கூறினார். அனைத்து பிரச்சினைகளும் உடனே களையப்படும் என பொதுமக்களுக்கு அவர் உறுதி அளித்தார். 

click me!