
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவதாக 81 பேரிடம் ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இனையடுத்து, மத்திய குற்றப் பிரிவு போலீஸார் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். அதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த வழக்கை அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. புகார் தாரர்கள் தங்கள் புகாரை திரும்ப பெற்றதால் அவ்வழக்கு ரத்து செய்யப்பட்டது.
மீதமுள்ள 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை மதுரையில் உள்ள துணை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து ஒரு மாதம் விலக்கு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.