
அதிமுகவினர் யாருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களுக்குத்தான் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி, அதிமுக தொண்டர்களுக்கான ஆட்சி என குறிப்பிட்டார்.
மேலும் அதிமுகவினர் யாரை கையை காட்டி இவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கூறுகிறார்களோ அவர்களுக்கே அரசு வேலை வழங்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஆகவே அதிமுகவினர் அனைவரும் அரசு வேலையை பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன், இந்த டீலுக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
இதனால் ஆனந்த அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கைதட்டி ஆரவாரமாக ரசித்தனர். ஆனால் செங்கோட்டையனின் இந்த அதிரடி பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனேவே அதிமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு பொதுக் கூட்டத்தில் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் செங்கோட்டையனின் பேச்சும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.