
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு சார்பில் நாளை அறிக்கை சமர்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் எங்கும் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்து சென்று சிரமபடுத்தகூடாது என கூறி சென்னையைச் சேர்ந்த, பாடம் நாராயணன் என்பவர் ஒரு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு மாணவ, மாணவியரை அனுமதிக்கக் கூடாது எனவும் இது போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தது.
முன்னேற்பாடுகளும் அனுமதியும் இல்லாமல் மாணவர்களை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது முறையான செயல் அல்ல என கூறி, இந்த வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்.
இதையடுத்து விடுமுறை நாளிலாவது மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்க அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விடுமுறை நாளிலும் எம்.ஜி.ஆர் விழாவில் மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சென்கூட்டையன், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு சார்பில் நாளை அறிக்கை சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.