காவிரிக்காக நாடாளுமன்றத்தை நீங்கள் முடக்கிய லட்சணம் தான் தெரியுமே? இபிஎஸ்க்கு தரமான பதிலடி கொடுத்த ரகுபதி.!

By vinoth kumar  |  First Published Feb 16, 2024, 10:20 AM IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் எனச் சொன்ன கே.சி.பழனிசாமியை மின்னல் வேகத்தில் கட்சியைவிட்டு ஏன் நீக்கினீர்கள்?


ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் அளித்த பதிலுரையைக் கொஞ்சமாவது கவனித்திருந்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் என்னென்ன? என்பது அவருக்குத் தெரிந்திருக்கும் என எடப்பாடி பழனிசாமி அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கையில்: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்த பிறகு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதத்தில் காற்றோடு கத்திச்சண்டை போட்டவருக்கு கைத்தட்டல்கள் கிடைக்குமா? என எண்ணி வெளியே சென்று பேசியிருக்கிறார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆச்சு...இது போன்ற செயல் திமுக அரசின் ஈவு இரக்கமற்ற தன்மையை காட்டுகிறது- சீறும் ஓபிஎஸ்

திமுக ஆட்சியில் நிறைய குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை அறிக்கைகள் அளித்ததா? அந்த குழுக்களை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனப் பேசியிருக்கிறார். அந்தக் குழுக்களின் அறிக்கைகள் எல்லாம் அரசின் செயல்பாட்டை, நிதிநிலையை மேம்படுத்த அமைக்கப்பட்டவை. அவை நிர்வாகம் தொடர்பானவை. அதனைப் பொதுப் பார்வைக்கு வைக்கவேண்டியதில்லை என்பது முதலமைச்சராக இருந்தவருக்குத் தெரியாதா? நீட் தேர்வு குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் போன்ற குழுக்களின் அறிக்கைகள் எல்லாம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையைப் பாதித்த மிக்ஜாம் புயல், தென் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதிப்புகளுக்குச் செலவழித்த தொகை விவரங்களை தரவில்லை எனவும் சொல்லியிருக்கிறார். இந்தப் பாதிப்புகள் கடந்த டிசம்பரில் ஏற்பட்டவை. ஒரு மாதத்திற்குள்ளாகவே செலவு விவரத்தை எப்படித் தர முடியும்? பாதிப்படைந்த சாலைகள் உட்பட பல பணிகள் தொடர் செலவினமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, செலவு எவ்வளவு? என்று கேட்கிறாரே முதலமைச்சராக இருந்த ஒருவர்.

ஒரு டிரிலியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்றார்கள். அதற்காக என்ன உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன எனச் சொல்லவில்லை எனப் புலம்பியிருக்கிறார். தமிழ்நாட்டை 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை வைத்துச் செயல்படுகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த இலக்கை எட்ட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் அளித்த பதிலுரையைக் கொஞ்சமாவது கவனித்திருந்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் என்னென்ன? என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். 

* இந்தியாவின் பொருளாதார வளத்திற்கு 9% பங்கைத் தருகிறது தமிழ்நாடு. 

*  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடம். 

*  ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24% என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19%. 

*  இந்தியாவின் பணவீக்கம் 6.65%. ஆனால், தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.97% ஆகக் குறைந்துவிட்டது.

*  தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3-வது இடத்துக்கு உயர்த்தப்பட்டது. 

இப்படி பட்டியல் போட்டுச் சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இவைதான் ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்லும் உத்திகள். இலக்கை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருப்பதற்கான சான்றுகள். இதனை எதிர்க்கட்சித் தலைவர் புத்தியில் ஏற்றிக் கொள்ளட்டும். 

காவிரி பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திச் சரியான தீர்ப்பைப் பெற்றோம். அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு காலதாமதம் செய்தபோது அதிமுகவின் 37 எம்.பி-க்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினார்கள். திமுக கூட்டணிக்கு 38 எம்.பி-கள் இருக்கிறார்களே. எங்களைப் போல திமுக போராடி மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற்றிருக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். பழைய பேப்பரை எல்லாம் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள் பழனிசாமி அவர்களே. 

காவிரிக்காக நாடாளுமன்றத்தை முடக்கிய உங்கள் லட்சணம் என்ன? என்பது தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லும் அந்த சம்பவம் 2018-இல் எதற்காக நடந்தது? ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர், காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதனை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காக அதிமுக எம்.பி-கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திப் பல நாட்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மேட்ச் பிக்ஸிங் உள்ளது என அன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவே குற்றம்சாட்டியதை எல்லாம் மறந்துவிட்டீர்களா? 

இதையும் படிங்க:  40 தொகுதி.. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாரான திமுக.. இளைஞரணிக்கு உத்தரவு போட்ட உதயநிதி ஸ்டாலின்..!

மோடி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறிவிடக் கூடாது என்கிற பாஜக-வின் அஜண்டாவைதான் அன்றைக்கு அதிமுக செயல்படுத்தியது. உண்மையிலேயே காவிரிக்காகத்தான் அன்றைக்கு நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியது என வைத்துக் கொண்டால், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் எனச் சொன்ன கே.சி.பழனிசாமியை மின்னல் வேகத்தில் கட்சியைவிட்டு ஏன் நீக்கினீர்கள்? அன்றைக்கு கே.சி.பழனிசாமி பா.ஜ.க.வுக்கு எதிராகப் பேசிவிட்டார் என்றதும் உடனே எஜமான விசுவாசம் வெளிப்பட்டது. காவிரிக்காக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உங்களிடம் கோரிக்கை வைத்தபோது ஆந்திரா பிரச்சினை வேறு. நமது கோரிக்கை வேறு என பாஜகவிற்கு ஆதரவாகத்தானே பதில் சொன்னீர்கள். 

2014 செப்டம்பரில் சொத்துக் குவிப்பு வழக்கில் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிபதி குன்ஹா அவர்கள் விதித்தபோது, 'காவிரியை வச்சுக்கோங்கா.. அம்மாவைத் தா' என போஸ்டர் ஒட்டியவர்கள்தானே அதிமுகவினர். காவிரிக்காக அ.தி.மு.க போராடியது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தோடு போய்விட்டது. 2016-இல் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற நேரத்தில், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' στ σστ வலியுறுத்தி அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குப் போனபோது, தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்ட வரலாற்றை எல்லாம் மறந்து விட்டீர்களா?

"தேர்தல் அறிக்கையில் சொன்ன அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் சொல்லி மக்களை ஏமாற்றியிருக்கிறீர்கள்" எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். சட்டமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்றிய விவரத்தை 2022 மார்ச்சில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். அதன்பிறகும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆட்சிக்கு வந்த உடனேயே 505 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட வேண்டும் என யாராவது கேட்பார்களா? அது சாத்தியமா? ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில்தான் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி இருக்கிறது. படிப்படியாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன், இலவச செட்டாப் பாக்ஸ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர், அம்பேத்கர் அறக்கட்டளை என அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்களா? ஊரக வேலைவாய்ப்பு 100 நாளில் இருந்து 150 நாட்களாக உயர்த்துதல், சேது சமுத்திரத் திட்டம், நீட் தேர்வு ரத்து போன்ற வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு என கேள்வி எழுப்பியிருக்கிறார். இவையெல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டியில் உள்ளவை. நிதிப் பகிர்வு முதல் திட்டங்கள் வரை ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. ஒன்றியத்தில் மோடி ஆட்சி மாறி இந்தியா கூட்டணி அமைந்தால் தான் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

click me!