தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை திட்டத்துக்கான நிதி, பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற உள்ளது.
தமிழக பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டபேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அந்த வகையில் நாளை தமிழக சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியதும் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டபேரவையில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசிப்பார். அவர் வாசித்து முடிந்ததும் சட்டசபை ஒத்தி வைக்கப்படும். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்ட விரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்
எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும்
இந்தக் கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. குறிப்பாக வேளாண் பட்ஜெட் தாக்கல் உள்பட அனைத்து அலுவல்கள் குறித்தும் அந்தக் கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்திற்கு பிறகு சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாகவும், மானிய கோரிக்கையின் தேதிகள் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிடுவார். இந்த பட்ஜெட்டில், பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, அதனால் பயனடையும் பெண்கள் பற்றிய விவரங்கள் அப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த 2022-23-ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.7 ஆயிரம் கோடி குறைந்திருந்தது.
தமிழக அரசின் வருமானம்
2023 - 24 ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை பத்தாயிரம் கோடி முதல் 15 ஆயிரம் கோடி வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை, டாஸ்மாக் கடைகள் மூலமாக கிடைத்த வருவாய், பெட்ரோல், டீசல், கனிமங்கள் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் போன்ற விவரங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும். அதுபோல தமிழக அரசுக்கு உள்ள கடன் அளவு, மேலும் வாங்க திட்டமிடப்பட்ட கடன் அளவு போன்ற அம்சங்கள் வெளியிடப்படும்.
ஆன்லைன் சூதாட்ட மசோதா தாக்கல்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீது சில கேள்விகளை எழுப்பி ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி உள்ள அந்த மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை, நீட் தேர்வு, பேனா சின்னம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.. இதன் காரணமாக தமிழக சட்டப்பேரவை அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை வருங்காலத்தில் நிச்சயம் தமிழக முதல்வராவார்... திருச்சி சூர்யா ஆருடம்!!