உங்களுக்கு நிலம் நாங்கள் கொடுத்தோம் .. தமிழ்த்தாய் வாழ்த்து இனி கட்டாயம்.. அமைச்சர் எச்சரிக்கை

By Thanalakshmi VFirst Published Nov 27, 2021, 6:32 PM IST
Highlights

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை ஐஐடி இயக்குநருக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதியுள்ளார்.
 

கடந்த நவம்பர் 20 ஆம் தேதியன்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற  பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த சமயத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாகவும் , அதனை தொடர்ந்து எழுந்த கண்டனங்களை அடுத்து, ஐ.ஐ.டி நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாது, 2019-ஆம் ஆண்டு ஐஐடி வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, தொடர்ந்து வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்பட வேண்டும் எனவும் ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் இது குறித்து தமிழக அரசு பேசி அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய்  வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்புகளிலிருந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில்,சென்னை ஐஐடி யில் இனி வரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்யுமாறு ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அமைச்சர் தெரிவித்திருப்பதாவது, ஐஐடி மெட்ராஸ் 58வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை 20.11.2021 அன்று உங்கள் வளாகத்தில் நடத்தியுள்ளது என்பதை நான் புரிந்துகொண்டேன். ஐஐடி மெட்ராஸ் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கிய 250 ஹெக்டேர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். அன்றிலிருந்து, இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகளில் பங்களித்து வருகிறது. தற்போதைய அரசும் அதே ஆதரவைத் தொடர்வதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. தற்போது கூட ஐ.ஐ.டி யில் கிரையோ-எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபிக்கான வசதியை நிறுவுவதற்கு மாநில அரசின் ரூ.10 கோடி நிதியுதவி கோரி, உயர்கல்வித் துறையின் அரசு முதன்மைச் செயலாளருக்கு நீங்கள் சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைகள் அவ்வாறிருக்கையில், சமீபத்தில் முடிவடைந்த பட்டமளிப்பு விழாவில், தமிழ் தாய் வாழ்த்து பாடப்படவில்லை, முறையான நெறிமுறைகளுக்கு மாறானது என்பதை அறிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர்மட்டப் பிரமுகர்கள் பங்கேற்கும் விழாக்கள் உட்பட, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு விழாக்களிலும் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுகிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே இனிவரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட நிறுவனத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் “தமிழ்த் தாய் வாழ்த்து” பாடப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

click me!