அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை இரண்டு நாட்கள் சோதனை நடத்திய நிலையில், பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
புழல் சிறையில் செந்தில் பாலாஜி
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் விசாரணை நடத்தி கைது செய்தது. அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய பகுதியில் அடைப்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து 33 நாட்களுக்கு பிறகு புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.
பொன்முடியை குறிவைத்த அமலாக்கத்துறை
இந்த பரபரப்புக்கு மத்தியில் அமலாக்கத்துறை அடுத்ததாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை குறி வைத்தது. கடந்த 2006-2011ம் ஆண்டு காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் திடீரென பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி 81 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியது. மேலும் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று வாக்குமூலமும் பெறப்பட்டது. எனவே பொன்முடியும் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியான நிலையில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து மீண்டும் நேற்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டிருந்தது.
பொன்முடிக்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலின்
இந்த சமயத்தில் பொன்முடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் விசாரணையை எதிர்கொள்ளுமாறு பொன்முடிக்கு அறிவுரை கூறினார். ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் கழகம் என்றும் துணை நிற்கும் எனவும் அப்போது அமைச்சர் பொன்முடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். இதனையடுத்து நேற்று மீண்டும் அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரான அமைச்சர் பொன்முடி நேற்று இரவு விடுவிக்கப்பட்டார்.
பொன்முடியை சந்தித்த ஸ்டாலின்
இந்தநிலையில் பெங்களூரில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலினும் நேற்று இரவு சென்னை திரும்பினார். இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று காலை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் பொன்முடி சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாகவும், விசாரணை தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொன்முடி விளக்கம் அளித்தார். மேலும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்