ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தேடிவந்த புதிய பொறுப்பு.. மத்திய நிதியமைச்சகம் எடுத்த முடிவு!

By Asianet TamilFirst Published Sep 26, 2021, 9:00 PM IST
Highlights

ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்த குழுவில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைச் சேர்த்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து தமிழகத்தில் சர்ச்சையானது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு செல்வதை ஒதுக்கி தள்ளிவிட்டு, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார் என்று அவர் மீது பாஜக, அதிமுக தலைவர்கள் பாய்ந்து வருகின்றனர். இந்த விஷயத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் விடாமல் பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்த குழுவில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயரைச் சேர்த்து மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் சீர்திருத்தக் குழுவில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த சவுதாலா, அசாம் நிதியமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் வர்த்தக அமைச்சர் டி.எஸ்.சிங் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தமிழ்நாடு  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில், “இக்குழுவில் தனக்கு இடம் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

tags
click me!