
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட மன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை தமிழக சட்டமன்றத்தின் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால், சசியோடு சண்டை போட்டுக்கொண்டு தர்மயுத்தம் தொடங்கி தனி அணியாக செயல்பட்டு வந்தார் பன்னீர்.
ஜெயலலிதா இருந்த பொது அமைச்சர் பதவி ஏதும் கொடுக்காமல் டம்மியாக வைத்திருந்த செங்கோட்டையனுக்கு பன்னீரின் அணியில் சேர்ந்த பாண்டியராஜன் பதவி பன்னீரின் அவை முன்னவர் பதவி என மொத்தமாக கொடுத்து முன்னிலை படுத்தியது சசிகலா குடும்பம்.
பேட்டி கொடுப்பதிலிருந்து ஒரு முடிவை தீர்மானிக்கும் வரையில் செங்கோட்டையனே முன்னிலை வகித்து வந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இரு அணிகளும் சமரசமடைந்து ஒன்றிணைந்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். பாண்டியராஜனுக்கு வேறு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால் செங்கோட்டையன் பதவியில் கை வைக்கப்படாமல் இருந்தது. அதற்கேற்ப பள்ளிக்கல்வி துறையில் மக்கள் போற்றும் வகையில் நல்ல நல்ல திட்டங்களைதான் செங்கோட்டையனும் அறிவித்து வந்தார்.
இந்நிலையில், இந்த வருடத்திற்க்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், வரும் 8ஆம் தேதி இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து நேற்று முன் தினம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இதைதொடர்ந்து அவை முன்னவர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டார்.
அவைத்தலைவர் பதவி அவை முன்னவர் பதவி என அடுத்தடுத்து பதவிகள் போனதால் செங்கோட்டையன் அப்செட்டாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரை தொடர்ந்து தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட மன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே டிடிவி தினகரன் தரப்பு ஸ்லிப்பர் செல் லிஸ்ட்டில் செல்லூர் ராஜுவும் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்றவாறு அவரும் டிடிவி தரப்பை சற்று விட்டுக்கொடுக்காமல் தான் பேசி வந்தார்.
பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து சென்ற போது செல்லூர் ராஜு, செங்கோட்டையன் உள்ளிட்டோர் தன்னை அவமதித்தாக அவரே குற்றச்சாட்டும் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எடப்பாடியாரின் இந்த அதிரடி முடிவுகள் அதிமுகவை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.