
ஆர்.கே.நகர் மக்கள் பணத்திற்கு விலை போய்விட்டதாக கமல் கூறியதற்கு அவரை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் வருகையை உறுதி செய்துவிட்ட கமல், கட்சி தொடங்கி நேரடி தேர்தல் அரசியலில் களமிறங்கும் பணிகளில் இறங்கியுள்ளார். இதற்கிடையே தமிழக அரசு மற்றும் மத்திய அரசை கமல் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். மேலும், மக்கள் பிரச்னைகள் குறித்தும் குரல் எழுப்பி வருகிறார்.
இந்நிலையில், வார இதழ் ஒன்றுக்கு எழுதிவரும் தொடரில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கமல் விமர்சித்திருந்தார். ஆர்.கே.நகரில் ஆளும் தரப்பும் சுயேட்சை தரப்பும் போட்டி போட்டு கொண்டு வாக்காளர்களின் தலைக்கு விலை நிர்ணயம் செய்தனர். அதில், அதிகவிலை நிர்ணயித்த சுயேட்சை வெற்றி பெற்றுவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு ஆகப்பெரிய ஜனநாயக அசிங்கம் என கமல் விமர்சித்து எழுதியிருந்தார்.
மேலும் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கும் உண்டா என ஆர்.கே.நகர் மக்களுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் மக்களை பணத்திற்கு விலை போய்விட்டதாக கமல் குறை கூறுகிறாரா என கேள்வி எழுப்பி கிளப்பி விட்டார்.
இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் வீட்டை இந்து பாதுகாப்பு அமைப்பினர், முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியானது. இதனால் கமலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் மக்கள் பணத்திற்கு விலை போய்விட்டதாக கமல் கூறியதற்கு அவரை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.