காவியை கட்டிகிட்டு காட்டுக்குள் உட்கார்ந்து தவம் செய்யுங்க.. இங்க வேணாம்!! ரஜினியை விளாசிய சீமான்

First Published Jan 6, 2018, 11:51 AM IST
Highlights
seeman criticized spiritual politics of rajini


ஆன்மீக அரசியல் செய்ய வேண்டும் என்றால், காவியை கட்டிக்கொண்டு காட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு தவம் செய்யுங்க என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். 

இந்நிலையில், ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார். கட்சி தொடங்கி, அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஆன்மீக அரசியல் செய்வோம் என ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசினார். ஆன்மீக அரசியல் என்ற கூற்று தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதமாக உருவெடுத்திருக்கிறது.

நேர்மையான, தர்மமான அரசியலைத்தான் ஆன்மீக அரசியல் என குறிப்பிட்டதாக ரஜினி விளக்கமளித்தார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் உள்ளது. தமிழ் தேசிய அரசியல் மற்றும் மாற்று அரசியலை முன்னெடுக்கும் சீமான், ரஜினியின் அரசியல் வருகையவே கடுமையாக எதிர்க்கிறார். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் வந்து வாழலாம். ஆனால் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என்பதே சீமானின் பிரதான கொள்கையாகவும் வாதமாகவும் உள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக சீமான் எதிர்த்துவருகிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சீமான், ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக மக்களுக்கு தேவையில்லை. தமிழக மக்களுக்கு ரஜினி என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதை செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம். அதனால் ரஜினி தேவையில்லை. நிறைய திரைப்படம் நடிங்க.. நல்லா சம்பாதிங்க.. அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். அரசியலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

ஆன்மீக அரசியல் என ரஜினி சொல்கிறார். ஆன்மீக அரசியல் செய்ய வேண்டும் என்றால், காவியை கட்டிக்கொண்டு காட்டுக்குள் சென்று தவம் செய்யுங்க.. தமிழ்நாட்டில் வேண்டாம் என ரஜினியின் அரசியல் பிரவேசத்தையும் அவரது அரசியல் நிலைப்பாட்டையும் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

click me!