BREAKING புதுச்சேரியில் பாஜக அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம்..!

By vinoth kumarFirst Published Jan 25, 2021, 1:14 PM IST
Highlights

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுள்ளார். 

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுள்ளார். 

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து என்.ஆா்.காங்கிரஸ் கட்சியை ரங்கசாமி உருவாக்கினார். பின்னர், ரங்கசாமி கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றினாா். இதனையடுத்து, 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ரங்கசாமியை தோற்கடிக்க அவரது நெருங்கிய உறவினரான நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. 

ஆனால், எதிர்பாராத விதமாக மூத்த அரசியல்வாதியான நாராயணசாமிக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. இதனால், நமச்சிவாயம் கடும் அதிருப்தி அடைந்தார். பின்னர், காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தி, அமைச்சரவையில் 2-வது இடம் வழங்கியது. மேலும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவராகவும் தொடா்ந்து பதவி வகித்து வந்தாா். பொதுப்பணித்துறை, கலால் துறை உள்பட 19 துறைகள் நமச்சிவாயத்திடம் உள்ளன. 

ஆனால், ஆட்சியிலும், கட்சியிலும் முதல்வர் நாராயணசாமி கையே ஓங்கியது. மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், நமச்சிவாயத்திடமிருந்த மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டு, காரைக்காலைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஏ.வி.சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது. இது, முதல்வா் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரிடையே பனிப்போராக வெடித்தது. கடந்த 6 மாதங்களாகவே அமைச்சா் நமச்சிவாயம் ஓரங்கப்பட்ட நிலையில் இருந்தார்.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாஜக காங்கிரஸ், கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியது. இதில், முதல்வர் நாராயணசாமிக்கு அடுத்த இடத்தில், அமைச்சரவையில் சீனியராக உள்ள நமச்சிவாயம் பாஜகவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலரும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நமச்சிவாயம் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

click me!