ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பா.? மே 7 வரை நீங்கதான் முதல்வர்.. எடப்பாடிக்கு மா.சு. பதிலடி.!

By Asianet TamilFirst Published May 28, 2021, 9:52 PM IST
Highlights

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கூற்று தவறானது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  "தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.  ஆக்சிஜன் படுக்கைக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள் இறக்கும் நிலை உள்ளது. ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும்” என்று தமிழக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
 “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்புப் பணிகளை முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோரெல்லாம் பாராட்டியுள்ளனர். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டங்களில் பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொண்டு பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் மே 7 வரை காபந்து அரசின் முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமிதான் இருந்தார். அன்றைய நிலையில், ஆக்சிஜன் இருப்பு தமிழகத்தில் 230 மெட்ரிக் டன். இன்று முதல்வரின் சீரிய முயற்சியால் ரூர்க்கேலா, துர்காபூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்களிலிருந்து ஆக்சிஜன் பெறப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் ஆக்சிஜன் இருப்பு 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. மேலும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியிலே ஒரு வார காலமாக முகாமிட்டுள்ளார். தமிழகத்தின் தேவையை மத்திய அரசின் மூலம் கேட்டுப் பெற்றுள்ளார். எனவே ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற முன்னாள் முதல்வரின் கூற்று தவறானது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

click me!