நில ஆக்கிரமிப்பு வழக்கு... சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஆஜராக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு விலக்கு..!

By vinoth kumarFirst Published Aug 11, 2021, 7:51 PM IST
Highlights

நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்ரமணியன் மீது மோசடி, கூட்டு சதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கு பதிவு செய்தனர். மா.சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினராகஇருப்பதால்  எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக மா.சுப்பிரமணியத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் நாளை குற்றச்சாட்டு பதிவுக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் மா.சுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், எந்த விதமான முறைகேடு நடைபெறவில்லை எனவும் தனது மகளுக்கு முறையாக மாற்றி எஸ்.கே. கண்ணன் வழங்கியுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை. அரசியல் ரீதியாக அளிக்கப்பட்ட புகாரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் தரப்பிற்கு மனுதரார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஆவணங்கள் கிடைக்கவில்லை எனவே அதனை வழங்க வேண்டும் என தெரிவித்தார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரினார். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் குற்றச்சாட்டு பதிவுக்கு மா.சுப்பிரமணியம் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை எதிர் தரப்பிற்கு வழங்க, மனுதரார் தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை செப்டம்பர் 3ம் தேதி ஒத்திவைத்தனர்.

click me!