
அமைச்சர் கடம்பூர் ராஜு இல்ல விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர். பின்னர் அவர், அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன்
செல்பியும் எடுத்துள்ளார். இந்த புகைப்படும் வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், செய்தியாளர்கள் சந்திப்பின்போது பெண் செய்தியாளரின் கன்னத்தை ஆளுநர் தட்டிக் கொடுத்தார். இதற்கு அந்த பெண்
செய்தியாளர் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பெண் செய்தியாளருக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றையும் ஆளுநர் எழுதியிருந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் மிக கேவலமான வார்த்தைகளால் ஒரு பதிவை
வெளியிட்டிருந்தார். இதற்கு கண்டனம் எழுந்த நிலையில் அப்பதிவை எஸ்.வி.சேகர் நீக்கிவிட்டார்.
எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார் எஸ்.வி.சேகர். முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை ஏன் கைது செய்யவில்லை என்றும் காவல் துறை மீது நீதிபதி அதிருப்தியும் தெரிவித்திருந்தார்.
போலீசார் பாதுகாப்புபோடு எஸ்.வி.சேகர் வலம் வருவதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.வி.சேகர் கலந்து
கொண்டதாகவும் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தன.
எஸ்.வி.சேகரை கைது செய்யாதது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். பெண் நிருபர்களையும், பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு மகனின் நிச்சயதார்த்த விழா சென்னை ஹில்டன் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதன் பிறகு, அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அவரது மனைவியுடன் செல்பியும் எடுத்துள்ளார் எஸ்.வி.சேகர். தற்போது இந்த புகைப்படம் வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.