அவுங்களுக்குதான் முதுகெலும்பு கிடையாது... டி.ஆர். பாலுவுக்கு எதிராகக் கொந்தளித்த அமைச்சர்!

By Asianet TamilFirst Published Aug 7, 2019, 6:38 AM IST
Highlights

யாரிடமும் எவ்வித கருத்தும் கேட்காமல், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க காரணமாக இருந்தது கருணாநிதிதான். எனவே முதுகெலும்பு இல்லாதவர்கள் திமுகவினர்தான். 

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த திமுகவினர்தான் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் மக்களவையில்  நேற்று விவாதம் நடைபெற்றபோது, திமுக சார்பில் டி.ஆர். பாலு பேசிக்கொண்டிருந்தார். அப்போது இடையே அதிமுகவின் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் குறுக்கிட்டார். இதனால் கோபமடைந்த டி.ஆர். பாலு., “உட்காரு, முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக் கூடாது” என்று கோபமாகக் கூறினார். டி.ஆர். பாலுவின் இந்தப் பேச்சுக்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி, டி.ஆர். பாலுவைப் பற்றி விமர்சித்து மீம்ஸ்கள் வெளியிடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் டி.ஆர். பாலு பேசியவிதம் குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார். “ஜெயலலிதா 1984-ம் ஆண்டில் மாநிலங்களவையில் எம்பியாக இருந்தபோது காஷ்மீர் குறித்து பேசியிருக்கிறார். ‘காஷ்மீர், இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு வர வேண்டும்’ என ஜெயலலிதா தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவின்  கருத்து இவ்வளவு காலத்துக்கு பிறகு செயலுக்கு வந்துள்ளது. ஜெயலலிதா எதையும் தொலைநோக்கு பார்வையில்தான் பார்ப்பார்.

 
1974-ம் ஆண்டில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது திமுக தலைவர் கருணாநிதிதான் முதல்வராக இங்கே இருந்தார்.  தமிழகத்தின் சார்பில் அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தால், கச்சத்தீவு நம்மை விட்டு போய் இருக்காது. யாரிடமும் எவ்வித கருத்தும் கேட்காமல், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க காரணமாக இருந்தது கருணாநிதிதான். எனவே முதுகெலும்பு இல்லாதவர்கள் திமுகவினர்தான். 
முதுகெலும்பு இல்லாமல் தமிழகத்தின் உரிமையை தாரைவார்த்து கொடுத்துவிட்டு, எங்களைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது.” என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். 

click me!