
டிடிவி தினகரன் தரப்பு எத்தனை ஆவணங்கள் சமர்பித்தாலும், கட்சியும் சின்னமும் தங்களுக்குத்தான் கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் திட்கூடவட்றிடமாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார். இதையடுத்து கட்சியும், சின்னமும் தங்களுக்குத்தான் சொந்தம் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்தனர்.
இந்நிலையில் சசிகலா ஆதரவுடன் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ம் இணைந்தனர். சசிகலா தரப்பில் டி.டி.வி.தினகரன், தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும், இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குத் தான் சொந்தம் என்றும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வரும் 6-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி டிடிவி தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது. இம்மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய , அமைச்சர் ஜெயக்குமார் , தினகரன் தரப்பு கூடுதல் ஆவணங்கள் வழங்கினாலும், தலைகீழாக நின்றாலும், கட்சியும், சின்னமும் எங்களுக்கு தான் கிடைக்கும் என கூறினார்.