
மீன்பிடி படகுகளில் சீன எஞ்சின்களை அகற்ற வலியுறுத்தி சென்னை காசிமேட்டில் நடந்த போராட்டத்தை தூண்டிவிட்டது திமுகவும் தினகரன் அணியும் தான் என ஆதாரத்துடன் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் அண்ணா மேலாண்மை நிறுவனத்தில், தலைமை செயலக ஊழியர்களுக்கு அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்த பயிற்சியை தொடங்கிவைத்த அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அண்ணா பயிற்சி நிறுவனத்தின் மூலம் இதுவரை தமிழக மாணவர்கள் 621 பேர், இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், சென்னை காசிமேட்டில் கடந்த திங்கட்கிழமை நடந்த மீனவர்கள் போராட்டம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
விசைப்படகுகளில் சீன எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து அவற்றை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்னதாக அரசின் மீது கலங்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் என் மீது மீனவர்கள் மத்தியில் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் மீனவர்களை திமுக போராட்டம் நடத்த தூண்டிவிட்டது.
அன்றைய தினம் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், மீனவர்கள் மட்டுமல்ல. வெவ்வேறு பகுதிகளில் இருந்து போராட்டத்திற்காக ஆட்கள் வரவழைக்கப்பட்டு சாலை மறியல் நடத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து சில இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் புகைப்படங்கள் உள்ளன. இதிலிருந்தே இந்த போராட்டத்தை தூண்டிவிட்டது திமுகதான் என்பது தெளிவாகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மனதில் கொண்டு திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும் தினகரன் அணியினரும் இணைந்துதான் அரசு மீது கலங்கத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்.
இவ்வாறு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.