
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை சென்ட்ரலில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். பல்வேறு சிக்கல்களைத் தாண்டி தீபாவளி அன்று இந்த படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் உள்நோக்கமாக கூட இருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனின் அனுபவம் பேசுகிறது என்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து இடத்தை பிடுங்குபவர் திருமாவளவன் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்திருந்தார்.
திருமாவளவன் பற்றி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை சௌந்தரராஜன் வீடு முன்பு அவரது உருவபொம்மையை எரித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நேற்று நடத்தினர். இதில் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை, சென்ட்ரல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் உருவபொம்மையை எரித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தால், சென்னை, சென்ட்ரல் அருகே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை, சென்ட்ரலில் மட்டுமல்லாது சென்னையின் பல இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
போலீஸ் அனுமதியின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் ஆனால் உடன்பாடு ஏற்படாததால் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.