தமிழகத்தில் எதிரிகள் இல்லாத அரசியலை முதல்வர் மு.க ஸ்டாலின் செய்து வருவதாக திமுக பொதுச்செயலாளரும்,நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி டவுனில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ”தமிழகத்தில் இப்போது எதிர்க்கட்சி தலைவராக ஆளுநர் தான் செயல்படுகிறார். இபிஎஸ் சிவனே என்று இருக்கிறார். ஓபிஎஸ் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. எதிரிகள் இல்லாத அரசியலை தமிழக முதல்வர் செய்து வருகிறார்.
கருணாநிதி அகில இந்திய அரசியலில் சாதித்து காட்ட 10 முதல் 15 ஆண்டுகள்வரை ஆனது. ஆனால் தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டு காலத்திலேயே இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவராக இருக்கிறார். எதிர்க்கட்சியான அதிமுகவும், எதிரியான பாஜகவும் நாங்கள் 2 ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை என சொல்லவில்லை. ஆனால் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று தமிழக ஆளுநர் சொல்லி வருகிறார்.
இதையும் படிங்க..கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!
இந்திய அரசியலமைப்பு சட்டம் 176-ன் படி அரசு கொடுக்கும் உரையை சட்டப் பேரவையில் ஆளுநர் கட்டாயம் படித்தே ஆக வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் சொல்கிறார். ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என சொல்கிறார். என்னிடம் எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை என ஆளுநர் பொய் சொல்கிறார்.
ஆளுநரிடம் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் வழங்கப்படாமல் கிடப்பில் உள்ளன. எங்களையும் ஆளுநர் மதிக்கவில்லை, அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்கவில்லை. எங்களை எதிரிகளைப்போல் பார்த்து வருகிறார். நாங்கள் கொள்கைக்காக, மக்களுக்கு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பாடுபடுகிறோம். இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என எத்தனையோபேர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க..கர்நாடகாவில் அரியணை ஏறுவது யார்.? ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு