இல்லம் தேடி கல்வி திட்டத்தில் எழுந்த சர்ச்சைகள்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!!

By Narendran SFirst Published Oct 28, 2021, 5:05 PM IST
Highlights

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதை அடுத்து கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் பல பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கத்தொடங்கின. இதனால் மாணவர்கள் பாடங்களை பயின்றாலும் பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாக கூறினர். இதனால் மாணவர்கள் கல்வி பயில்வதில் சிக்கல் நீடித்தது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு சற்று குறையத்தொடங்கியதை அடுத்து தற்போது பள்ளி கல்லூரிகள் சில திறக்கப்பட்டுள்ளது. அன்மையில் தொடக்கப்பள்ளிகள் திறக்கும் தேதியும் கூட அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழக அரசு இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆன்லைனில் கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்குப் பலன் அளிக்கும் இப்படியொரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதனிடையே இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், சித்தாந்த ரீதியாக கொள்கை கொண்ட தன்னார்வலர்களை இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அனுமதிக்கமாட்டோம். பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பின்புலம் முழுமையாக ஆராயந்த பிறகே திட்டத்தில் அனுமதிப்போம். அதனையும் மீறி யாரேனும் பதிவு செய்தால் அவர்கள் திட்டத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட மாட்டாது என்று தெரிவித்தார். மேலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்துள்ள தலைவர்களுக்கு இத்திட்டம் குறித்து முழுமையாக விளக்கம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

click me!