வட மாநிலங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் வீதிகளில் வந்து போராடுகின்றனர்: பாஜகவை எச்சரித்த நெல்லை முபாரக்.

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2020, 11:25 AM IST
Highlights

வட மாநிலங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் இன்றைக்கு வீதிகளில் வந்து போராடி வருகிறார்கள். மத்திய உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரும் விவசாயிகளுக்கு விரோதமான இந்த சட்டத்தைக் கண்டித்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மோடி அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது:- 

விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நிறைவேறியுள்ளது. இந்த சட்ட வரைவுகளில் உள்ள குறைகளை தேர்வு குழுவுக்கோ அல்லது நிலைக் குழுவுக்கோ அனுப்பி ஆராயாமல், எந்தவித திருத்தங்களும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ளது.  இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எந்தவிதப் பலனையும் அளிக்காது. மாறாக அது பெருமுதலாளிகளுக்கே மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க வழிவகுக்கும். அதனால் தான் வட மாநிலங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் இன்றைக்கு வீதிகளில் வந்து போராடி வருகிறார்கள். மத்திய உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரும் விவசாயிகளுக்கு விரோதமான இந்த சட்டத்தைக் கண்டித்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

மத்திய அரசின் இந்த சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. விவசாயிகளுக்கு அதுதான் மிகவும் முக்கியமான ஒன்று என்பதால், இந்த சட்ட வரைவுகள் விவசாயிகளைப் பாதிக்காது என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டை நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை. புதிய சட்டங்களால் இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்யும்  இப்போதைய வெளிப்படையான கொள்முதல் நடைமுறையை மத்திய அரசு நிறுத்திவிட்டு அதனை கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றிவிடும். அதனால் அவர்களின் கருணைக்காக விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை நீக்கப்படும். இதனால் பெருநிறுவனங்களின் பதுக்கல், கள்ளச்சந்தை உள்ளிட்டவற்றை தடுக்க முடியாத நிலை ஏற்படும். இந்த சட்டங்கள் மாநில அரசின் சந்தைப்படுத்தல் உரிமை, கொள்முதல் உரிமை, பதுக்கலை தடுக்கும் உரிமை போன்றவற்றை தட்டிப் பறிக்கின்றன. அதுமட்டுமின்றி மாநிலங்களின் வரி வருவாயை மத்திய அரசு பறித்துச் செல்லும் நிலை உருவாகும். இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். 

தமிழக முதல்வர் இந்த மூன்று விவசாய விரோத சட்டங்களையும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்கள் என கூறுவது தவறானது. விவசாயிகளுடைய குரலை கேட்காமலேயே இந்த சட்டங்கள் நிறைவேற அதிமுகவுக்கு ஆதரவளித்தது கண்டிக்கத்தக்கது. ஆகவே, விவசாய விரோத 3 சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு எதிராகவும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை போராட்டமும், மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெறவிருக்கின்றன என தெரிவித்துள்ளார். 
 

click me!