எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும்: எல்.முருகனுக்கு மரண அடி கொடுத்த அமைச்சர்

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2020, 11:01 AM IST
Highlights

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியது குறித்த கேள்விக்கு, எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும்.

நவீன கால விவசாயத்திற்கு ஏற்றது என புதிய வேளாண் துறை மசோதா குறித்து முதல்வரும், பிரதமரும், துறை சார்ந்த அமைச்சரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே எங்களது நிலைப்பாடு மசோதாவை  ஆதரிப்பதுதான் என அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதேபோல் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பதில் அளித்துள்ளார். 

மதுரை எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகளை மதுரை மாவட்ட தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஆட்சியர் வினய் உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, உயிர்காக்கும் கவச உடைகளை அணிந்து தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்வுகளை பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:- 

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் 60 சதவீதம் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தியடையும். உயிர், உடைமை, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் மற்றும் மீட்புப்பணிகள், நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. வடகிழக்கு பருவமழையொட்டி நீர் சேமிப்பு பகுதிகளிலும், நீர் நிலைகளையும் குடிமராமத்து செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் வெற்றிகரமாக பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். கடலோர மாவட்டங்களில் நிரந்தர புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. பள்ளி கல்லூரிகளை நிவாரண முகாம்களாக மாற்றி உள்ளோம். கோவிட் காலம் என்பதால் நிவாரண முகாம்களில் சமூக இடைவெளி, கழிவறை உள்ளிட்ட வசதிகளை கூடுதலாக ஏற்படுத்தி உள்ளோம். மதுரை மாவட்டத்தில் 27 தாழ்வான பகுதிகளும், 31 நிலைக்குழுக்கள், 33 நிவாரணக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 

காலத்திற்கேற்ற வகையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை விவசாயத்துறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. நவீன காலத்திற்கேற்ப விவசாயத்தை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. நவீன கால விவசாயத்திற்கு ஏற்றது என மசோதா குறித்து முதல்வரும், பிரதமரும் துறை சார்ந்த அமைச்சரும் கருத்து தெரிவித்துள்ளனர்.எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாவையும் எதிர்க்கின்றனர். அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. நவீன காலத்திற்கேற்ப விவசாயகள் விவசாயத்தை மேம்படுத்த விவசாய மசோதா உதவும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியது குறித்த கேள்விக்கு, எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும். அந்தந்த கட்சித்தலைவர்கள் அவரவர் கொடிகளை தூக்கிப்பிடிக்க உரிமை உள்ளது. அவர் கட்சிக்கொடியை தூக்கிப்பிடிக்க தான் அவரை தலைவராக நியமித்துள்ளனர் என பேசினார்.

 

click me!