ஆயிரங்காலத்து கனவு நனவானது.. சனாதன கருத்தியல் மீது நடந்த அறவழி தாக்குதல்.. கொண்டாடித் தீர்க்கும் திருமாவளவன்!

By Asianet TamilFirst Published Aug 14, 2021, 9:58 PM IST
Highlights

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகரானதன் மூலம் ஆயிரங்காலத்துக் கனவு நனவாகியது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் தொடக்க விழாவில் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 5 தலித்துகள் உள்பட 58 பேருக்கு அர்ச்சகர்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அண்மையில்தான் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து தமிழக வரலாற்றில் முதன்முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற விழாவில் பணி நியமன ஆணையைப் பெற்றவர்கள். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட 58 கோயில்களில் பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதை பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜகவும் வரவேற்பு தெரிவித்துள்ளது. திமுக கூட்டணியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். 
பேஸ்புக்கில் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர். ஆயிரங்காலத்துக் கனவு நனவாகியது. இது வேலை வாய்ப்புக்கானது அல்லது கடவுளுக்குத் தொண்டு செய்வது என்பதைவிட, மனிதரில் உயர்வு- தாழ்வு எனும் கற்பிதத்தின் மீது - சனாதனக் கருத்தியல் மேலாதிக்கத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள அறவழி தாக்குதல்.” என்று பதிவிட்டுள்ளதோடு  #இதுவே_சமூகநீதி என்றும் ஹாஸ்டேக் இட்டுள்ளார் திருமாவளவன்/

click me!